த.வெ.க. அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு நிலையில் உள்ள அரசுத்துறை உயர் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
கடந்த 2 நாட்களாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனர். தொடர்ந்து இன்றும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
அதன்படி சென்னை மாநகராட்சி இணை ஆணையராக இருந்த ஜெயசீலன் சுற்றுலாத் துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஸ்ரேயா சிங் புதிய இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அது போல் சிவகங்கை மாவட்ட கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா மதுரைக்கும், அங்கிருந்த கலெக்டர் ஆகாஷ் சிவகங்கைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
அது போல் விடுப்பில் இருந்த இன்னசென்ட் திவ்யா தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழக நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி கழகத்தின் மேலாண் இயக்குநராக கவிரா ராமு நியமனம் செய்யப்பட்டு உள்ளார். மாநகர போக்கு வரத்து கழக இயக்குநராக இருந்த பிரபாகர் புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநராக மாற்றப்பட்டார்.
பிரபாகருக்கு பதிலாக சுரங்கத் துறையில் இருந்த டி.மோகன் மாநகர போக்குவரத்து கழக இயக்கு நராக மாற்றப்பட்டார். ஈரோடு வணிகவரி இணை ஆணையர் பொன்மணி திருச்சி மண்டல அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநராக ரமண சரஸ்வதி நியமிக்கப்பட்டார்.