சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான 2 நாள் மாநாடு தொடங்கியது.
முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆட்சியர்கள், காவல்துறை உயரதிகாரிகளுடனான மாநாடு 3 அமர்வுகளாக நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.
முதல் அமர்வில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் இணைந்து கலந்து கொள்கின்றனர். இந்த அமர்வில் முதலில் சட்டம் ஒழுங்கு தலைப்பில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆய்வு, குறிப்பாக பெண்களுக்கு எதிராக நடக்கும் நகை பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள், போலீஸ் நிர்வாகத்தின் பொறுப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆய்வு செய்யப்படுகிறது.
அதன்பின்னர், பெண்கள் பாதுகாப்பு, சிங்கப்பெண் அதிரடிப்படையின் செயல்பாடுகள், போக்சோ வழக்குகளின் நிலை, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.
இதையடுத்து, போதை பொருள் இல்லாத தமிழகம் என்ற தலைப்பில் அதற்கு எதிரான நடவடிக்கைகள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. கல்வி நிறுவனங்களில் போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவது, கள்ளச்சாராயத்தை கடுமையாக ஒடுக்குவது, தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனைக்கு எதிரான நடவடிக்கைகள் ஆகியவை உள்பட பல்வேறு சட்டம் ஒழுங்கு நிலவரம் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
3-வது அமர்வில் கலெக்டர்கள் மற்றும் ஐ.எப்.எஸ். அதிகாரிகள் இணைந்து ஆய்வு மேற்கொள்கின்றனர். 2 நாட்களாக நடக்கும் இந்த அமர்வுகளின் நிறைவில் முதல் அமைச்சர் விஜய் உரையாற்றகிறார். அப்போது திறமையான செயல்பட்ட கலெக்டர், போலீஸ் அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகளை பாராட்டி பரிசுகளை வழங்குகிறார்.