தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வேலைகள் தொடங்கியபோதே, கொளத்தூர் தொகுதியில் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினைத் தோற்கடிக்கச் சதி நடப்பதாக ஒரு பெண் தன்னைத் தொடர்பு கொண்டு எச்சரித்ததாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு எதிர்க்கட்சிகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் வெளியிட்ட தகவல்கள் தமிழக அரசியல் வட்டட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
பேரவைத் தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்ற காலகட்டத்தில், தன்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒரு பெண், கொளத்தூர் தொகுதியில் அப்போதைய திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினைத் தோற்கடிப்பதற்கான சதி வேலைகள் நடப்பதாகக் கூறினார். அந்தப் பெண் தொடர்ந்து தன்னைத் தொடர்புகொண்டு பேசியதால், அவரை நேரில் வரவழைத்து அப்போதைய அமைச்சர் சேகர்பாபுவிடம் பேச வைத்ததாக திருமாவளவன் தெரிவித்தார்.
மேலும், இந்த விவகாரம் குறித்து மு.க.ஸ்டாலினிடமும் நேரடியாகப் பேசியதாகவும், "கொளத்தூரில் ஏதோ பிரச்சனை இருப்பதாகக் கூறுகிறார்கள், அதனால் நீங்கள் ஏன் வேறு தொகுதிக்கு மாறி நிற்கக் கூடாது?" என்று யோசனை தெரிவித்ததாகவும் அவர் கூறினார். ஆனால், சேகர்பாபு தரப்பில் எஸ்ஐஆர் பணிகள் முறையாக நடைபெறுவதாகவும், எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையிலும் இது குறித்து தான் மீண்டும் எச்சரித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
யார் மீதும் தனிப்பட்ட முறையில் குற்றம் சுமத்தும் நோக்கில் இதைத் தான் இப்போது கூறவில்லை என்று குறிப்பிட்ட திருமாவளவன், எஸ்ஐஆர் முறையில் மேற்கொள்ளப்பட்ட இரட்டைப் பதிவு நீக்கங்களில் திட்டமிட்ட முறைகேடுகள் நடந்துள்ளதாகத் தெரிவித்தார். மேற்கு வங்க மாநிலத்தோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில்தான் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.
குறிப்பாக, கொளத்தூர் தொகுதியில் மட்டும் சுமார் 1 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும், இது சாதாரணமான நிகழ்வு அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பாஜக ஆட்சிக்கு வர முடியாத மாநிலங்களில் மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த முதல்வர்களாக இருந்த மு.க.ஸ்டாலின், மமதா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பினராயி விஜயன் போன்ற தலைவர்கள் திட்டமிட்டுத் தோற்கடிக்கப்பட்டுள்ளனர் என்று குற்றம்சாட்டியுள்ள திருமாவளவன், இது ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு எதிரான சதி மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஜனநாயகத்திற்கும் எதிரான சதி என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.