தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில், எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தநிலையில், அதிமுகவிற்குள் மீண்டும் மோதல் வெடித்தது.
இந்த மோதலால் சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி தலைமையில் ஒரு அணியினர் இணைந்து இபிஎஸ்க்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். தவெகவுடனான கூட்டணி விவகாரம் உள்ளிட்ட பல விவகாரங்களை குறிப்பிட்டு இபிஎஸ்மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.
மேலும் சட்டசபையில் தவெகமீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் வெளியில் இருந்து இவர்கள் தரப்பு 25 அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து இவர்களின் பதவிகளைப் பறித்தார்.
இதனிடையே எஸ்பி வேலுமணி தரப்பினர் எதிர்பார்த்தவாறு தவெகவில் பதவிகள் கிடைக்காதநிலையில், மீண்டும் இபிஎஸ் உடன் சுமூக நிலையை எட்டினர். இதனைத்தொடர்ந்து கட்சியில் மீண்டும் இணைந்தவர்களுக்கு இபிஎஸ் பதவி வழங்கினார்.
அந்தவகையில் எஸ்.பி.வேலுமணிக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கினார். ஆனால் பறிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் பதவியை மீண்டும் வழங்கவில்லை.
இந்நிலையில் தனக்குப் பதவி வேண்டாம் எனக்கூறி மீண்டும் இபிஎஸ்க்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார் எஸ்.பி.வேலுமணி.
கோவையில் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்திய வேலுமணி அக்கூட்டத்தில் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார். கூட்டத்தில் பேசிய வேலுமணி,
“நான் பதவிதான் வேண்டாம் என்கிறேன். என்னை நம்பி வந்தவர்களை விட்டுவிட்டு நான் மட்டும் பதவி வாங்க தயாராக இல்லை. என்னுடன் 30 மாவட்டத் தலைவர்கள் வந்துள்ளனர், அவர்களுக்கு பதவி வழங்கப்படவில்லை. நான் மட்டும் எப்படி பதவியை ஏற்றுக்கொள்ள முடியும்?
என் பின் நிற்பவர்கள் கட்சிக்காக உழைத்தவர்கள். வீரமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், சிவி சண்முகம் மாவட்ட தலைவர்களின் ஜாம்பவான்கள். செலவு செய்து கட்சியை வளர்த்தவர்கள். அவர்களுக்கு பதவி வழங்கவில்லை.” என தெரிவித்துள்ளார்.