தமிழக செய்திகள்

பூந்தமல்லி-வடபழனி மெட்ரோவில் முதல் நாளே அலைமோதிய கூட்டம்: வெறும் 5 மணிநேரத்தில் 25,000 பேர் பயணம்!

இன்றைய தினம் முதல் இரு திசைகளிலும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரெயில் தொடக்க நாளான நேற்று மட்டும் 5 மணிநேரத்தில் 25,000 பேர் பயணம் செய்துள்ளனர்.

சென்னையின் போக்குவரத்து வசதியை மேலும் மேம்படுத்தும் வகையில், பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான புதிய உயர்மட்ட மெட்ரோ ரெயில் சேவை நேற்று பொதுமக்களின் பயன்பாட்டுக்காகத் தொடங்கப்பட்டது. இதனைப் பிரதமர் நரேந்திர மோடியும், தமிழக முதலமைச்சர் விஜயும் இணைந்து கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, நேற்று மாலை 4 மணி முதல் பொதுமக்களுக்கான சேவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. முதல் நாள் என்பதால், இந்த புதிய வழித்தடத்தில் பயணம் செய்யப் பொதுமக்களிடையே பெரும் ஆர்வம் காணப்பட்டது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலான வெறும் 5 மணிநேரத்திற்குள், 25,000-க்கும் அதிகமானோர் மெட்ரோ ரெயில்களில் உற்சாகமாகப் பயணம் செய்துள்ளனர் என்று ரெயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

வழித்தட விவரங்கள்

பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ ரெயில் நிலையம் தொடங்கி வடபழனி மெட்ரோ ரெயில் நிலையம் வரை சுமார் 15 கிலோமீட்டர் நீளத்திற்கு இந்த முதல்கட்ட சேவை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் மொத்தம் 11 உயர்மட்ட மெட்ரோ ரெயில் நிலையங்கள் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளன.

ரெயில் இயக்க நேர அட்டவணை

பொதுமக்களின் வசதிக்காக இன்றைய தினம் முதல் இரு திசைகளிலும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கான பிரத்யேக நேர அட்டவணையையும் ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது:திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் உள்ள உச்ச நேரங்களில் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கு ஒருமுறையும், இதர நேரங்களில் 15 நிமிடத்திற்கு ஒருமுறையும் ரெயில்கள் இயக்கப்படும்.

ஞாயிறு மற்றும் விடுமுறை நாள்களில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து நேரங்களிலும் 15 நிமிடத்திற்கு ஒருமுறை ரயில் சேவை வழங்கப்படும். கடைசி ரெயில் சேவை நாள்தோறும் இரு முனையங்களிலிருந்தும் (பூந்தமல்லி புறவழிச்சாலை மற்றும் வடபழனி) இரவு சரியாக 9 மணிக்குக் கடைசி மெட்ரோ ரெயில் புறப்பட்டுச் செல்லும்.

இந்த புதிய மெட்ரோ வழித்தடம் திறக்கப்பட்டதன் மூலம், பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்களின் நீண்ட நாள் போக்குவரத்து நெரிசல் சிக்கலுக்குத் தீர்வு கிடைத்துள்ளதுடன், சென்னை நகரின் பிற பகுதிகளுக்கு எளிதில் பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT