தமிழக செய்திகள்

தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசிய விவகாரம் - முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சம்மன்

கரூர் ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் பூர்வீக வீட்டிற்கு சென்று சென்னை காவல்துறை சம்மன் வழங்கியது.

தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசிய விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

குதிரை பேரம்

சட்டசபையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வரும்போது. ஆளும்கட்சிக்கு எதிராக செயல்பட்டால் ரூ.35 கோடி வரை பணம் கொடுப்பதாக தி.மு.க.வினர் தன்னிடம் குதிரை பேரம் நடத்தியதாக சென்னை போலீஸ் கமிஷனரிடம், ஊத்தங்கரை த.வெ.க. எம்.எல்.ஏ., இளையராஜா கடந்த மாதம் 29-ந்தேதி புகார் செய்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து, யூடியூபர் திருநாவுக்கரசு, திருச்சியைச் சேர்ந்த நரேஷ், சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் உள்பட 8 பேரை கைது செய்துள்ளனர்.

செந்தில் பாலாஜி

கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு உள்ளிட்டோர், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியும், அவருடைய தம்பி அசோக் குமாரும் கூறியதன்பேரில் இந்த பேரத்தை நடத்தியதாக போலீசில் வாக்குமூலம் அளித்தனர்.

அதன்பேரில், செந்தில் பாலாஜியையும், அவரது தம்பி அசோக்குமாரையும் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

முன்ஜாமின் மனு

இதற்கிடையே, இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

செந்தில் பாலாஜிக்கு சம்மன்

இந்நிலையில், தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்த விவகாரம் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

கரூர் ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் பூர்வீக வீட்டிற்கு சென்று சென்னை காவல்துறை சம்மன் வழங்கியது. செந்தில் பாலாஜியின் தந்தையிடம் கையெழுத்து பெற்று சென்னை திருவல்லிக்கேணி காவல்துறை சம்மன் வழங்கி உள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வரும் திங்களன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு செந்தில் பாலாஜிக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.