

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
பொழுது புலர்ந்தாலே, எல்லோருக்கும் புத்துணர்ச்சி பிறக்கும். எனக்கோ, அந்தப் புத்துணர்ச்சியோடு புது உற்சாகமும் ஊக்கமும் கிடைக்கிறது. அதற்கு உடன்பிறப்புகளான நீங்களன்றி வேறு காரணமில்லை. தேர்தல் தோல்வியால் நான் துவண்டுவிடவில்லை என்றாலும், சோர்வு நம்மை அண்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய தலைமைப் பொறுப்பு என்னிடம் உள்ள கடமையை உணர்ந்து, நாள்தோறும் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்திற்கு வரத் தொடங்கினேன்.
“மக்கள் பணியே எல்லாவற்றையும் விட மகத்தானது. மக்களுக்காக உழைப்பதே நம் கடமை” என்று அங்கு திருவுருவச் சிலையென நிற்கும் பேரறிஞர் அண்ணாவும் - முத்தமிழறிஞர் கலைஞரும் நிதமும் அறிவுறுத்துகின்றனர்.
“சோதனைகள் நமக்கென்ன புதிதா? அந்த நெருப்பாறுகளை நீந்திக் கடப்போம் வா” என்று கம்பீரமாய் எழுந்து நிற்கும் கற்கோட்டையான அறிவாலயத்தின் வாயில் தினமும் வரவேற்கிறது.
உள்ளே நுழைந்ததும், “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் உன்னை இயக்குவது நாங்கள்தான்; நீ இயங்குவது எங்களுக்காகத்தான். நம் பயணத்தின் வேகம் கூட வேண்டும். அதற்குப் புதிய பாதையில் நாம் பயணிக்கத் தொடங்க வேண்டும்” என்று விழிகளின் வழியே அன்புக் கட்டளையை இட்டவாறு உடன்பிறப்புகளான உங்களில் பலர் வரவேற்கின்றனர்.
கழக நிர்வாகிகள் - கழக முன்னோடிகள் தொடங்கி, கழகத்தின் மீது பற்றுக்கொண்ட ஆதரவாளர்கள் எனக் குழந்தைகள் - மாணவர்கள் - இளைஞர்கள் - பெண்கள் - முதியோர் என நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் என்னைக் காண வருகின்றனர். அப்படி வரும் ஒவ்வொருவரிடமும் பேசி, அவர்களது எண்ணங்களையும் - உணர்வுகளையும் நான் அறிந்து வருகிறேன். ஒவ்வொருவரின் குரலும் சொற்களும்தான் வேறுபடுகிறதே தவிர, அனைவரது உணர்வும் ஒன்றுதான். அவர்கள் என்னிடம் சொல்வதெல்லாம், “நாங்க இருக்கோம். நாம மீண்டும் வருவோம்!”. இந்தச் சொற்கள் போதுமே, எதிரிகளை ஒருசேர வீழ்த்தும் வலிமையைக் கொடுக்க!
இந்த வலிமையை நீங்கள் கொடுப்பதால்தானே 75 ஆண்டுகளைக் கடந்தும், கம்பீரமாக நிற்கிறோம்!
வரலாற்றைத் திரும்பிப் பாருங்கள்… நம்மைப் போல் வெற்றி பெற்றவர்களும் இல்லை; தோல்வியைக் கண்டவர்களும் இல்லை. வெற்றியை நாம் தலையில் ஏற்றிக்கொண்டதுமில்லை; தோல்வியை இதயத்தில் தாங்கிக்கொண்டதுமில்லை! அதனால்தானே ஃபீனிக்ஸ் பறவையென மீண்டெழுகிறோம்.
இன்று நாட்டில் நடக்கும் காட்சிகளைப் பாருங்கள்… ஒரு சில இயக்கங்களால் ஒரு தோல்வியைக்கூடத் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
ஆனால் நாம், கொள்கை உறவாலும் - உடன்பிறப்பு எனும் நேசத்தாலும் பிணைக்கப்பட்டு, ஒரு குடும்பம் என ஆல் போல் வேரூன்றி வளர்ந்து நிற்கின்றோம்.
அப்படிப்பட்ட நம் இயக்கம் அடுத்த நூறாண்டுகளுக்குப் பயணிக்க வேண்டிய திசையைத் தீர்மானிக்க வேண்டியதும், உங்கள் உணர்வுகளை உள்வாங்கி அதில் புதிய பாதையை அமைக்க வேண்டியதும் தலைமைத் தொண்டனான என் கடமையல்லவா!
அதனால்தான், 38 பேர் கொண்ட 19 குழுக்களை அமைத்து, ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று, உங்களின் உள்ளங்களை அறிந்து வந்து, ஒளிவுமறைவின்றி என்னிடம் வழங்கச் சொன்னேன். அதுமட்டுமின்றி, உங்கள் குரல் ஒலித்திட எவ்வித தயக்கமும் கூடாதென “உடன்பிறப்பின் குரல்” என்ற இணையதளத்தையும் உருவாக்கினேன்.
நீங்களும் உங்கள் எண்ணங்களை உரிமையோடும் அக்கறையோடும் எடுத்துச் சொன்னீர்கள். என் கண்களும் காதுகளுமாய் வந்தவர்கள், அவற்றை என்னிடம் கொண்டு வந்து சேர்த்தனர்.
காலை அறிவாலயத்தில் உங்களைச் சந்தித்து கருத்துகளைக் கேட்பதும், மாலை தொடங்கி இரவு வரை நீங்கள் பதிவு செய்த கருத்துகளைப் படிப்பது எனவும் அன்றாடம் உங்களின் எண்ணங்களை ஆய்ந்தறிவதையே வழக்கமாகக் கொண்டிருந்தேன். உங்களது எண்ணங்களின் அடிப்படையில், கழகத்தின் மறுசீரமைப்பிற்காக - மறுகட்டுமானத்திற்காக, இளமையும் அனுபவமும் கலந்த “மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு”வையும் இப்போது அமைத்திருக்கிறேன்.
இந்தக் குழு, கழக மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய மறுவரையறை, கழகத்தின் சார்பு அணிகளின் மறுசீரமைப்பு, தேர்தல் பணிக்குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்புகள், கிளை முதல் தலைமை வரை மறுசீரமைப்பு குறித்த பரிந்துரைகளை என்னிடம் வழங்கிட அறிவுறுத்தியுள்ளேன்.
“தி.மு.க.வைப் போல் அமைப்புரீதியான பலம் கொண்ட வேறு கட்சி, இந்தியாவிலேயே கிடையாது” என்பதை நான் பல்வேறு மேடைகளில் சொல்லி இருக்கிறேன். நான் மட்டுமல்ல, பிற இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்களும் - பிற மாநிலத் தலைவர்களும் - அரசியல் நோக்கர்களும்கூட இந்த உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
அத்தகைய பலம் பொருந்திய அமைப்பு எழும்போது மலையென நிற்க வேண்டும்! கதிரவன் என ஒளி வீச வேண்டும்! அந்த ஒளியில் அடுத்த ஒரு நூற்றாண்டுக்கான நமது வரலாற்றையும் தமிழ்நாட்டின் புது வரலாற்றையும் நாம் ஒருசேர எழுத வேண்டும்!
இந்தப் பணிகளை எல்லாம் ஒப்படைத்துள்ள நிலையில்தான், நான் இன்று அயலகப் பயணம் மேற்கொள்ளவுள்ளேன். இருவாரங்கள் அயலகத்தில் இருந்தாலும், அறிவாலயத்தில்தான் என் மனம் இருக்கும்; அங்கு நாள்தோறும் வரும் உங்கள் முகங்கள் தான் என் நெஞ்சில் நிழலாடும்! என்று கூறியுள்ளார்.