தமிழக செய்திகள்

குதிரை பேரம் குற்றச்சாட்டு: உதயநிதி ஸ்டாலின் ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்- பெ. சண்முகம்

த.வெ.க.வுக்கு வெளியில் இருந்து ஆதரவு தொடரும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொதுமக்கள் தங்களுடைய பிரச்சினைகளை தெரிவிக்க கவர்னர் மாளிகையை அணுகலாம் என்று கவனர்னர் கூறியிருக்கிறார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது, கவர்னர் தானாகவே பிரச்சினைகளை தீர்த்துவிடுவது போல் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்திருப்பது பொருத்தமானது அல்ல. இந்த அணுகுமுறையை அவர் மாற்றிக்கொள்ள வேண்டும்.

கவர்னர் என்பவர் அரசியலமைப்பு சட்டம் தனக்கு வழங்கியுள்ள அதிகார வரம்பிற்குள் மட்டுமே தங்கிச் செயல்பட வேண்டும். தற்போதைய கவர்னரின் இந்த அணுகுமுறையானது, இதற்கு முன்பு தமிழகத்தில் பரவலான விமர்சனத்திற்கு உள்ளான முன்னாள் கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளைப் போன்றே உள்ளது.

ஆதரவு யாருக்கு?

இடைத்தேர்தலை பொறுத்தவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இடதுசாரிகள் தற்போது ஒரு மாநில அளவிலான ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கியுள்ளது. நாங்கள் எந்த அணியிலும் கிடையாது. அதே நேரத்தில் த.வெ.க.வுக்கு வெளியில் இருந்து ஆதரவு தொடரும்.

பணப் பலன்களின் காரணமாகவே குதிரை பேரம் நடத்தப்பட்டு எதிர்க்கட்சிகள் தமிழக அரசுக்கு ஆதரவளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறிய இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது. இதற்கான ஆதாரங்களை அவர் சமர்ப்பிக்க வேண்டும்.

அரசு அதிகாரப்பூர்வக் கூட்டங்களில் தனியார், தனிநபர்கள் பங்கேற்பது தொடர்பாக கவர்னரிடம் மனு அளிக்க பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் சென்றுள்ளனர். இந்தப் பிரச்சினை தொடர்பாக பா.ஜ.க., தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய அனைத்துக் கட்சியினருமே கவர்னரை சந்தித்துள்ளனர்.

தேர்தலில் வெற்றி பெற்ற உடனே பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சியில் இணையும் எம்.எல்.ஏ.க்களின் போக்கையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கடுமையாக கண்டிக்கிறது.

இது வாக்காளர்களின் நம்பிக்கைக்குச் செய்யும் துரோகம் மட்டுமின்றி தேவையற்ற இடைத்தேர் தல்களை மக்கள் மீது திணித்து சுமையை ஏற்படுத் துகிறது. இத்தகைய கட்சித் தாவல்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஏற்கனவே கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.