தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் குதிரை பேரம் நடந்து எம்.எல்.ஏ.க்கள் விலை பேசப்பட்டுள்ளதாக அ.தி.மு.க. சார்பில் புகார் மனுக்கள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை ஐகோர்ட்டிலும் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் அ.தி.மு.க. சார்பில் இன்று புகார் மனு அளிக்கப்பட்டது.
அந்தக் கட்சியின் கொறடாவும் முன்னாள் அமைச்சருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஐ.எஸ். இன்பதுரை எம்.பி. ஆகியோர் இன்று டி.ஜி.பி. மகேஷ் குமார் அகர்வாலை சந்தித்து மனு அளித்தனர்.
பின்னர் அக்ரிகிருஷ்ண மூர்த்தி அளித்த பேட்டி வருமாறு:-
குதிரை பேரத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி டி.ஜி.பி.யிடம் இன்று மனு அளித்து உள்ளோம். குதிரை பேர நிகழ்வுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அதில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளோம்.
தமிழகத்தினுடைய தலைமைச் செயலகத்திலேயே பேரவைத் தலைவரிடம் 11 மணியளவில் ராஜினாமா கடிதத்தை கொடுக்கிறார்கள். அன்றைய தினமே 11.15 மணியளவில் மேலே சென்று அமைச்சருடைய அறையிலேயே அவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்படுகிறது. அதன் பிறகு பேரவை தலைவர் அவருடைய ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்திருப்பது ஜனநாயகத்திற்கு முரணானது. தமிழக சட்டப்பேரவை மரபுகளுக்கும் முரணானதாகும்.
இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியே இன்று மனு அளித்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இன்பதுரை எம்.பி. கூறும்போது, ‘இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களின் செல்போன்களை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.