தமிழ்நாட்டில் அக்டோபர் 15-16 தேதிகளில் வடகிழக்கு பருவமழை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.இதன் எதிரொலியால் சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழையானது பெய்து வருகிறது.
சென்னையில் வடகிழக்கு பருவமழை தொடங்கி நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையின் முக்கிய பகுதிகளான எழும்பூர், சென்ட்ரல் , சேத்துப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழையானது பெய்து வருகிறது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகியவற்றில் கடந்த இரண்டு நாட்களாகவே நல்ல மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வெளியூர்களுக்குப் பயணிக்கும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக ஆயுதபூஜை தொடர் விடுமுறையால் சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் கோயம்பேடு, தாம்பரம் ரயில் நிலையம், கிளாம்பாக்கம் பேருந்து முனையம்,எழும்பூர் ரயில் நிலையத்தை நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் பரவலாக பெய்து வரும் மழை பயணித்தில் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களுக்கு மிககனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று மிககனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னை உள்ளிட்ட 25 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படிசெங்கல்பட்டு, நெல்லை, குமரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், வேலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறையில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதைப்போல்கோவை, ஈரோடு, நாமக்கல், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.