திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே யூடியூப் வீடியோவைப் பார்த்து வீட்டிலேயே இயற்கை முறையில் பிரசவம் பார்த்த இளம்பெண் சசிகலா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக அவரது கணவர் மீது போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்துக்குளி அடுத்த தளவாய்பாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி சசிகலா. இந்த தம்பதிக்கு ஏற்கனவே 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், இரண்டாவதாகக் கருவுற்ற சசிகலாவை, கார்த்திக் எந்தவொரு மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லாமல், யூடியூப் பார்த்து வீட்டிலேயே இயற்கை முறையில் பிரசவம் பார்க்க முடிவு செய்துள்ளார். அதன்படி, கடந்த 24-ஆம் தேதி சசிகலாவுக்கு வீட்டிலேயே பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், பிரசவித்த சில நிமிடங்களிலேயே சசிகலாவுக்கு கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.
உடல்நிலை மோசமடைந்த சசிகலாவை உடனடியாக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி சசிகலா பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து திருப்பூர் மாவட்ட சுகாதாரத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இன்று திருப்பூர் மாவட்ட மருந்தக ஆய்வாளர் ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில், சசிகலாவின் கணவர் கார்த்திக் மீது கொலையாகாத மரணம் விளைவித்தல், கருவுற்றதை மறைத்து தனிப்பட்ட முறையில் பிரசவம் பார்த்தல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.