தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், முந்தைய திமுக ஆட்சியில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து மத்திய அரசின் அமலாக்கத்துறை ஆவணங்களை மேற்கோள் காட்டிப் பேசினார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது;
“என்ன அமலாக்கத்துறை அறிக்கை? அவரால் எப்படி அமலாக்கத்துறையின் அறிக்கையை மேற்கோள் காட்ட முடியும்? அமலாக்கத்துறை ஒன்றும் தமிழ்நாடு அரசின் முகமை அல்ல. அது ஒரு மத்திய அரசின் முகமை. ‘நான் பா.ஜ.க-வின் அடிமை’ என்று அவரே தன்னைத் தானே அம்பலப்படுத்துகிறார்.
மிசா சட்டத்தின் கீழ் திமுகவைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தான் கைது செய்யப்பட்டனர், அதிமுக உறுப்பினர்கள் அல்ல.
இந்தியா முழுவதும் இருந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர், ஆனால் அவர்கள் இறுதியில் விடுதலை செய்யப்பட்டனர்.
மேலும், இந்த மிசா சட்டத்தைக் கொண்டு வந்ததற்காக இந்திரா காந்தி பின்னர் வருத்தம் தெரிவித்தார்.” என தெரிவித்தார்.
முதலமைச்சரின் சட்டப்பேரவை பேச்சுத் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.,
“அமலாக்கத்துறை சொன்ன விஷயங்கள் எல்லாம் முதலமைச்சர் படித்துக் காட்டினார். அதெல்லாம் வெறும் குற்றச்சாட்டுகள். எதுவுமே நிரூபிக்கப்படவில்லை. விசாரணை போய்க்கொண்டிருக்கிறது. மூன்று கோப்புகளை திறக்க சொன்னார்கள் என சொல்லிவிட்டு, அதைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை.
அமலாக்கத்துறை சொல்லி இருக்கிற குற்றச்சாட்டுகளைத்தான் இவர் வந்து சட்டசபையில் படித்துக் காட்டுகிறார். இன்னும் சொல்லப்போனால், சர்க்காரியா கமிஷனுக்குப் பிறகு மக்களுடைய ஆதரவைப் பெற்று மூன்று முறை திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. உங்கள் அத்தனை பேருக்கும் தெரியும். தமிழ்நாட்டு மக்களுக்கும் தெரியும்.
ஆட்சியில் இருக்கும்போது ஊழல் செய்துவிட்டார்கள் என்று நிரூபிக்கப்பட்டு, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரே முதலமைச்சர் யார், ஒரே தலைவர் யார் என்பது இங்கு இருக்கக்கூடிய அத்தனை பேருக்கும் தெரியும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த எங்களுடைய தலைவர்களோ, எங்களுடைய முன்னாள் அமைச்சர்களோ, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களோ இதுவரைக்கும் யாரும் அதுபோல் தண்டிக்கப்படவில்லை.
முதலமைச்சர் மீது கூடத்தான் வருமான வரித்துறை வழக்கு இருக்கிறது. 15 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதை மறைத்ததாக அவர் மீது ஒரு வழக்கு இருக்கிறது.
வருமான வரித்துறை வழக்கு இருக்கிறது. வருமானத்தை மறைத்ததற்கு வழக்கு போட்டால், ரொம்ப லேட்டாக வழக்கு போட்டிருக்கிறீர்கள் என்று நீதிமன்றத்தில் ஓப்பனாக ஒத்துக்கொண்டவர்தான் இன்று இருக்கக்கூடிய இந்த டம்மி முதலமைச்சர்.
அதுமட்டுமல்ல, இங்கு இருக்கக்கூடிய பொதுப்பணித்துறை அமைச்சர் மீது அமலாக்கத்துறை வழக்கு இருக்கிறது. நடந்துகொண்டிருக்கிறது. இப்படி அவர்களுடைய கட்சியில் ஊழல் செய்துகொண்டு இருக்கிறார்.
விஜயபாஸ்கர், கு.பா கிருஷ்ணன் இப்படி பல்வேறு தலைவர்கள் மீது, முன்னாள் அமைச்சர்கள் மீது எல்லாம் அமலாக்கத்துறை வழக்குகள் இருக்கின்றன.” என தெரிவித்தார்.