தமிழக செய்திகள்

விவசாயிகளின் பல மாத உழைப்பு ஒரு நாள் மழையால் வீணாகுகிறது- மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் அறிவியல் அடிப்படையில் சேமிப்பு கட்டமைப்பை உருவாக்குவதற்காக நிரந்தர சேமிப்பு கிடங்குகளை கட்ட உத்தரவிட வேண்டும்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்டா உள்ளிட்ட மத்திய மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் கொள்முதல் செய்ய தயாராக வைத்திருந்த மற்றும் நெல் கொள்முதல் நிலையங்களில் வைத்திருந்த நெல் மூட்டைகள் போதிய பாதுகாப்பு வசதியின்மையால் மழையில் நனைந்து சேதம் அடைந்தது.

தஞ்சை மாவட்டம் பட்டீஸ்வரம் பகுதியில் திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணான விவகாரத்தில் 2 பணியாளர்களை சஸ்பெண்டு செய்து நுகர்பொருள் வாணிப கழகம் உத்தரவிட்டது.

இந்தநிலையில் தஞ்சையை சேர்ந்த அமிர்தராஜ் ஹமீதுதீன் ஐகோர்ட் மதுரை அமர்வில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் அறிவியல் அடிப்படையில் சேமிப்பு கட்டமைப்பை உருவாக்குவதற்காக நிரந்தர சேமிப்பு கிடங்குகளை கட்ட உத்தரவிட வேண்டும். மேலும், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை மழை, வெள்ளம் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் சேமிப்பு, பராமரிப்பு, கையாளுதல், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு தொடர்பான நிலையான வழிகாட்டுதல்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தவும், இதுபோன்ற சேதங்களால் விவசாயிகளுக்கு ஏற்பட்டு இழப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அதற்கு நீதிபதிகள், மனுதாரர் குறிப்பிட்டிருக்கும் இடம் மட்டுமல்ல, பல மாவட்டங்களில் இந்த பிரச்சனை உள்ளது. ஒரு நாள் மழையில், பல மாத உழைப்பு வீணாகிறது. பெரும் இழப்பு ஏற்படுகிறது. விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர் என கருத்து தெரிவித்தனர்.

மேலும் வழக்கு தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தலைவர் பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூலை 27-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.