தமிழக செய்திகள்

ஆசனூரில் இரவில் ஊருக்குள் புகுந்து தெரு வீதிகளில் உலா வந்த ஒற்றை யானை

ஆசனூர் பஸ் நிலைய பகுதிகளில் இரவில் மக்கள் வழக்கம் போல் நடமாடிக் கொண்டிருந்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப் பகுதிகளில் யானைகள் அதிகளவில் வசித்து வருகின்றன. சமீப காலமாக உணவு தண்ணீர் தேடி யானை கூட்டங்கள் அடர்ந்த வனப் பகுதியை விட்டு வெளியேறி அருகே இருக்கும் கிராமங்களுக்குள் நுழைவதும், தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை தின்றும் மிதித்தும் சேதப்படுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் அச்ச மடைந்துள்ளனர்.

ஒற்றை யானை

இந்நிலையில் ஆசனூர் பஸ் நிலைய பகுதிகளில் இரவில் மக்கள் வழக்கம் போல் நடமாடிக் கொண்டிருந்தனர். அங்குள்ள டீக்கடை ஓட்டல், வணிக நிறுவனங்களில் ஏராளமான மக்கள் நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை ஒன்று ஆசனூர் ஊருக்குள் புகுந்தது. ஊருக்குள் புகுந்த யானை ஒவ்வொரு தெருவாக சுற்றித்திரிந்து கடைசியாக பஸ் நிலையப் பகுதிக்குள் வந்தது அங்குள்ள கடைவீதிகளில் உலா வந்தது.

பொதுமக்கள்

அப்போது கடைவீதிகளில் பொருட்கள் வாங்க நின்று இருந்த பொதுமக்கள் திடீரென ஒற்றை யானை கடை வீதிகளில் வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர். தேநீர் கடையில் நின்று கொண்டிருந்த மக்கள் திடீரென யானை சாலையில் ஓடி வருவதைக் கண்டு நாலா புரமும் சிதறி அடித்து ஓடினர்.

கேமரா

இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளில் பதிவாகி இருந்தது. பின்னர் மக்கள் ஒன்றிணைந்து அதிக சத்தம் எழுப்பி யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த ஒற்றை யானை ஆசனூரில் உள்ள ஒவ்வொரு தெருவாக நுழைந்து இறுதியில் உண்டு உறைவிடம் பள்ளி வழியாக நீண்ட போராட்டத்துக்கு பிறகு வனப் பகுதிக்குள் சென்றது. இதனால் பொது மக்கள் வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.