தென்தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவில் விளங்கி வருகிறது.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆனி பெருந்தேரோட்ட திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்ட நாளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி நெல்லையப்பர் தேரை வடம் பிடித்து இழுப்பர்.
அதன்படி இந்த ஆண்டு ஆனி பெருந்திருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் காலையும், மாலையும் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்குமேல் 4 மணிக்குள் சுவாமி-அம்பாள் தேரில் எழுந்தருளினர். காலை 7.10 மணிக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா ஆகியோர் தலைமை தாங்கி தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் ராபர்ட் புரூஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ரெட்டியார்பட்டி நாராயணன், ஆர்.எஸ். முருகன், சதீஷ் கிறிஸ்டோபர், மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய், மாவட்ட வருவாய் அதிகாரி துரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி, மாநகராட்சி கமிஷனர் மோனிகா ரானா, ஆர்.டி.ஓ. பிரியா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதில் த.வெ.க. நெல்லை தெற்கு மாவட்ட செயலாளர் ராஜகோபால், கிழக்கு மாவட்ட செயலாளர் ஜாகீர் உசேன், வடக்கு மாவட்ட இணை செயலாளர் மரிய ஜான், நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராமேஸ்வரன், முன்னாள் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முதலில் விநாயகர் தேர், தொடர்ந்து சுப்பிரமணியர் தேர் உள்ளிட்டவை இழுக்கப்பிட்ட பின்னர் சுமார் 500 டன் எடை கொண்ட சுவாமி தேரை ஓம் நமச்சிவாயா கோஷம் விண்ணதிர பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
தேரோட்டத்தையொட்டி நெல்லை மட்டுமல்லாது வெளிமாவட்ட காவல்துறையினர் என்று சுமார் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தேரோட்ட பாதுகாப்பு பணிக்காக பிரத்யேகமாக 3 டிரோன் காமிராக்கள் மற்றும் 280 கண்காணிப்பு காமிராக்கள் மூலம் நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோவிலின் உட்புறமும், வெளிபுறம் நான்கு ரதவீதிகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் கூட்டநெரிசலில் குற்றங்கள் எதுவும் நடக்காமல் தடுப்பதற்காக குற்றப்பிரிவு காவலர்களை கொண்ட 10 குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அவர்கள் பக்தர்களுடன் பக்தர்களாக கலந்து கண்காணித்தனர். மேலும் ஒலிப்பெருக்கி, எச்சரிக்கை பலகைகள், துண்டு பிரசுரங்கள் ஆகியவற்றின் மூலம் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ரதவீதிகளில் உயர் கோபுரங்கள் அமைத்து குற்றங்கள் எதுவும் நடக்காமல் கண்காணிக்கப்பட்டது.
கோவிலை சுற்றியுள்ள ரதவீதிகளில் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு காணாமல் போனவர்கள் பற்றிய விபரங்களையும், காவல் துறைக்கு தெரிவிக்க வேண்டிய ஏனைய விவரங்களையும் அம்மையங்களில் உள்ள காவலர்களிடம் தெரிவிக்க வசதி செய்யப்பட்டு இருந்தது.
அதுமட்டுமின்றி பொது மக்கள் மற்றும் பக்தர்களின் வசதிக்காக 24 மணி நேரமும் செயல்படும் ஆம்புலன்ஸ் சேவை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் பேட்டை கண்டியப்பேரி, மவுண்ட் ரோடு, காட்சி மண்டபம் பகுதிகளின் வழியாக ரத
வீதிகளுக்குள் வாகனங்கள் நுழைவதை தடுத்திட பேரிகார்டுகள் அமைத்து போலீசார் காவல் பணியில் ஈடுபட்டனர்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் வருகையால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவக்குழுவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. குழந்தைகள் காணாமல் போய்விடுவதை தடுக்க அவர்களது கைகளில் டேக் கட்டப்பட்டு அதில் பெற்றோரின் பெயர், செல்போன் எண் எழுதி அனுப்பி வைக்கப்பட்டனர்.
காலையிலேயே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தேர் வடம் பிடித்து இழுக்கும் பக்தர்களுக்கு உழவார பணி குழுவினர் சார்பில் குடங்களில் குடிநீர் எடுத்துவரப்பட்டு கொடுக்கப்பட்டது. இதேபோல் பக்தர்களுக்கு விசிறிகளும் வழங்கப்பட்டன. நடமாடும் கழிப்பறைகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.