ரூ.972 கோடியில் கொள்ளிடம்-வெள்ளாறு, நொய்யல் ஆறுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை யில் இன்று கேள்வி நேரத்தின்போது, சிதம்பரம் மற்றும் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏக்கள் எழுப்பிய கோரிக்கைகளுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் பதில் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கொள்ளிடம் ஆற்றின் கடைமடை பகுதியில் தடுப்புச்சுவர் பருவநிலை மாற்றத்தின் காரணமாக கடல் நீர்மட்டம் உயர்ந்து, கொள்ளிடம் ஆற்றின் முகத்துவாரம் வழியாக சுமார் 18 கிலோமீட்டர் தூரத்திற்கு கடல்நீர் உட்புகுவதால் சுற்றியுள்ள கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனைத் தடுக்கும் வகையில், வங்காள விரிகுடா கடலிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில், கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் திருக்கழிப் பாலை கிராமத்திற்கும், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் அளக்குடி கிராமத்திற்கும் இடையே, கொள்ளிடம் ஆற்றின் கடைமடை பகுதியில் சுவர் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் வீரன் கோயில்திட்டு, கொட்டாமேடு, கவரப்பட்டு, ஜெயங்கொண்டபட்டினம், அளக்குடி, ஆச்சாள்புரம், கொள்ளிடம் உள்ளிட்ட பல கிராமங்கள் பயன்பெறுவது டன், நிலத்தடி நீர் செறி வூட்டல் மூலம் சுமார் 13,220 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இத்திட்டத்திற்காக முதற்கட்டமாக ரூ.773 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது துறை மேற்கொண்ட மாதிரி ஆய்வுகளின் முடிவுகளின் அடிப்படையில் திருத்தப்பட்ட விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. அது பெறப்பட்டவுடன் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
வெள்ளாற்றில் ரூ.194 கோடியில் தடுப்பணை மேலும், கடல் நீர் உட்புகுவதைத் தடுக்கும் வகையில் கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம், தீத்தாம்பாளையம் கிராமம் அருகே ஆதிவராகநல்லூர் பகுதியில் வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், ஆதிவராக நல்லூர் பகுதியில் தடுப்பணை அமைப்பதற்கான திட்டத்தில் நில எடுப்புப் பணிக்கு ரூ.44.39 கோடி உட்பட மொத்தம் ரூ.194 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு துறையின் பரிசீலனையில் உள்ளது.
தொழிற்சாலைகளிலிருந்து கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதைத் தடுக்க தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து கண்காணித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
திருப்பூர் மாநகராட்சி பகுதிக்குள் மங்கலம் பாலம் முதல் மணியகாரம் பாளையம் பாலம் வரையிலான நொய்யல் ஆற்றுப் பகுதியில், ஓடைகள் மற்றும் மழைநீர் வடிகால்கள் வழியாக சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நீண்ட காலமாக கலந்ததன் காரணமாக ஆகாயத்தாமரை, சீமைக்கரு வேலம் உள்ளிட்ட செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன.
இதனை கருத்தில் கொண்டு, முதலமைச்சர் விஜய்யின் அறிவுறுத்தலின் படி, நொய்யல் ஆற்றை புனரமைக்கும் பணிக்காக ரூ.5 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, தற்போது அரசின் பரிசீலனையில் உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.