தமிழக செய்திகள்

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 3,297 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கல்

அரசு சார்பில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்துக்கு ரூ.755.83 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அயனாவரம் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் டாக்டர் பிரகலாதன் தொடங்கி வைத்தார்.

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதலமைச்சர் விஜய் நேற்று மதுரை ராஜாஜி மருத்துவமனையில் நேற்று தொடங்கி வைத்தார். அங்கு பிறந்த ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒரு கிராம் தங்க மோதிரத்தை அணிவித்தார்.

3,297 மோதிரங்கள்

அதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 3,297 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டன. அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் அதிகாரிகள் தங்க மோதிரங்களை வழங்கினார்கள்.

அரசு சார்பில் இத்திட்டத்துக்கு ரூ.755.83 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 1.28 லட்சம் மோதிரங்கள் கொள்முதல் செய்து தயார்நிலையில் உள்ளது. மொத்தம் 4.42 லட்சம் மோதிரங்கள் கொள்முதல் செய்ய அரசு ஆணை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தாய்மாமன் தங்க மோதிரம்

சென்னை அயனாவரம் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர்(இ.எஸ்.ஐ.) டாக்டர் பிரகலாதன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் இணை இயக்குனர் டாக்டர் பத்மா, சென்னை மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் மாதவி, துணை இயக்குனர் அம்பாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த திட்டத்தின் மூலம் முதல் பயனாளியாக சுதாபிரியா என்பவரின் குழந்தைக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை மருத்துவமனை கண்காணிப்பாளர் சித்ரா, உறைவிட மருத்துவ அலுவலர் பாஸ்கர், ஸ்ரீவித்யா ஆகியோர் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT