ராமநாதபுரத்தில் தாயுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி மாயமானார். பின்னர் சிறுமி உறைகிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் சிறுமியின் அத்தையை கைது செய்துள்ளனர்.
மதுரை பைகாரா முத்துராமலிங்கபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் பாலகணேஷ் (வயது 28) கூலித்தொழிலாளி. இவருடைய மனையி கார்த்திகைசெல்வி இவர்களுக்கு 5 வயதில் சாய் தீப்தி, சாரு நித்திகா என்ற இரட்டை பெண் குழந்தைகள் உண்டு. இவர்கள் இருவரும் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தனர். கார்த்திகைசெல்வி விடுமுறை நாட்களில் தனது மகள்களுடன் ராமநாதபுரம் எம்.எஸ்.கே.நகர் பகுதியில் உள்ள தனது தந்தை முத்துமுருகன் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் விடுமுறை தினத்தையொட்டி கார்த்திகைசெல்வி தனது மகள்களுடன் ராமநாதபுரத்திற்கு வந்தார். அங்கு தனது தந்தையின் வீட்டில் இரவு சாப்பிட்டுவிட்டு கார்த்திகை செல்வி, அவருடைய மகள்கள், தாய் உள்ளிட்டோர் தூங்கச் சென்றனர். நள்ளிரவில் வீட்டிற்குள் கடும் புழுக்கமாக இருந்ததால் கார்த்திகைசெல்வி வீட்டின் வாசல் கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை 5.30 மணி அளவில் கார்த்திகைசெல்வி எழுந்து பார்த்தபோது, மகள் சாய் நீப்நியை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனால் விட்டில் இருந்த அனைவரும் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் சிறுமி கிடைக்கவில்லை. சிறுமி மாயமான தகவல் அக்கம்பக்கத்தில் பரவியதால் அனைவரும் திரண்டு வந்து தேடினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ராமநாதபுரம் நகர் போலீசார் தேடும் பணியை தொடங்கினர். அப்போது கார்த்திகைசெல்வியின் பெற்றோர் வீட்டின் பின்புறம் உள்ள உறைகிணற்றில் சிறுமி சாய் தீப்தி இறந்த நிலையில் கிடந்தார்.
இதையடுத்து தீயணைப்புத்துறை வீரர்கள் வரவழைக்கப்பட்டு உறைகிணற்றுக்குள் இறங்கி சிறுமியின் உடலை வெளியே கொண்டு வந்தனர். சிறுமியின் உடலை பார்த்து தாய், தாத்தா, பாட்டி உள்ளிட்டோர் கதறி அழுதனர். பின்னர் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டாக்டர் ராஜீ அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சென்று சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, போலீசார் மற்றும் டாக்டரிடம் விவரங்களை கேட்டறிந்தார்.
சிறுமி பிணமாக மீட்கப்பட்ட உறைகிணறானது தரையின் உயரத்தில் இருந்து சிறுமியின் உயரத்திற்கு சரிசமமாக இருப்பதால் அவர் தவறி விழுந்திருக்க வாய்ப்பில்லை என்றும், பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே சிறுமி இறப்புக்கான காரணம் தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் சிறுமி பிணமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் அத்தையை போலீசார் கைது செய்தனர்.
கணவரின் அக்காள் மகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் சிறுமியை கிணற்றில் உயிரோடு போட்டு துடிதுடிக்க கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
காதல் திருமணம் செய்ததால் தனது குழந்தைகளுக்கு முக்கியத்துவம் தராத ஆத்திரத்தில் சிறுமியின் அத்தை வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார்.