தமிழ்நாட்டின், கோவை காந்திபுரத்தில் சுமார் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பிரம்மாண்ட ‘பெரியார் அறிவுலகம்’ நூலகத்தை முதலமைச்சர் விஜய் இன்று திறந்துவைத்தார்.
காந்திபுரம் நஞ்சப்பா சாலையில், சிறைத்துறைக்குச் சொந்தமான 6.98 ஏக்கர் நிலத்தில், சுமார் 1.98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் புத்தகத்தைத் திறந்து வைத்திருப்பது போன்ற வடிவமைப்பில் தரைத்தளத்துடன் சேர்த்து 8 அடுக்குகள் கொண்ட பிரம்மாண்ட கட்டிடமாக நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவுலகத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள், இ-நூலகம் , மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக படிப்பறை, அறிவியல் மையம், கோளரங்கம், மற்றும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராக இருப்பவர்களுக்கான பிரத்யேகப் படிப்பு அறைகள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் இந்த நூலகத்தை கட்டமைத்த கட்டடக் கலை நிபுணர் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த பெரியார் அறிவுலகத்தை வடிவமைத்தவர் சென்னையைச் சேர்ந்த பிரபல கட்டடக் கலை நிபுணர் டாக்டர் பொன்னி முகுந்தன் ஆஸ்கர் ஆவார்.
திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் இளங்கலை கட்டடப் பொறியியல் படிப்பை முடித்தார். முதலில் இவர் கல்லூரி சேர முயன்றபோது, பாதுகாப்பு காரணங்களைக் கூறி, பெண்களுக்கு அனுமதி இல்லை என்று கல்லூரி நிர்வாகம் மறுத்துள்ளது.
எப்படியோ போராடி சேர்ந்தபிறகு, ஆரம்பத்தில் கல்லூரி நிர்வாகமும், பேராசிரியர்களும் இவருக்கு சாதகமாக இல்லை. நாட்கள் செல்ல செல்ல, இவரது திறனை கண்டு கல்லூரி நிர்வாகமும் அவருக்கு உறுதுணையாக இருந்துள்ளது.
பின்னர் திருச்சியில் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் படித்த முதல் இளங்கலை பெண் மாணவி என்ற பெருமையைப் பெற்றார்.
பின்னர் 1989-ல் அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மேம்பட்ட தொழில்முறைப் படிப்பையும் முடித்தார். பின்னர் 1995-ல் சென்னை திரும்பிய அவர், ஆஸ்கார் கான்செஸாவோவை திருமணம் செய்துகொண்டார்.
சிவில் இன்ஜினியரான தனது தந்தை, ரயில்வே பாலங்களையும், சுரங்கங்களையும் கட்டுவதை பார்த்த பிறகே இத்துறைமீது அவருக்கு ஈர்ப்பு வந்துள்ளது.
மேலும் அவருடைய தந்தையை தவிர, குடும்ப உறுப்பினர்கள் யாரும் இந்த முடிவிற்கு பெரிய ஆதரவை தரவில்லை.
இருவரும் இணைந்து ஆஸ்கர் & பொன்னி ஆர்கிடெக்ட்ஸ் என்ற கட்டிடக்கலை மற்றும் உள் வடிவமைப்பு நிறுவனத்தை நிறுவினர்.
அன்று முதல், அரசு கட்டிடங்கள், கல்வி நிறுவனங்கள், அருங்காட்சியகங்கள், மருத்துவமனைகள், ஆடம்பர குடியிருப்புகள் மற்றும் ஓய்வு விடுதிகள் உட்பட 500-க்கும் மேற்பட்ட திட்டங்களை இந்நிறுவனம் வடிவமைத்துள்ளது.
ஏப்ரல் 2023-ல் திறக்கப்பட்ட தெலங்கானா மாநில தலைமைச் செயலகத்தை வடிவமைத்ததன் மூலம், ஒரு மாநிலத் தலைமைச் செயலகக் கட்டிடத்தை வடிவமைத்த முதல் ஆசியப் பெண் கட்டிடக் கலைஞர் என்ற பெருமையை பெற்றார்.
இவ்வாறு இந்தியா மட்டுமின்றி மலேசியா முதல் கத்தார்வரை பல்வேறு நாடுகளில் நூற்றுக்கணக்கான கட்டிடங்களை தனது கணவர் ஆஸ்கார் கான்செஸாவோவுடன் இணைந்து வடிவமைத்துள்ளார்.
தெலங்கானா தலைமைச் செயலகத்தைத் தொடர்ந்து, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் ககன்யான் விண்வெளி மையத்திற்கான உள்கட்டமைப்பு வசதிகளையும் வடிவமைத்துள்ளார்.
இவரின் இந்த படைப்புகளுக்காக 181-க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார். அதில் ஒன்று, எந்த கல்வி நிறுவனம் பெண் என அவரை சேர்க்க மறுத்ததோ, அதுவே 2014-ஆம் ஆண்டுக்கான ‘சிறந்த முன்னாள் மாணவர் விருது’ ஒன்றையும் வழங்கியது.
2019-ல் பெர்க் பிசினஸ் எக்ஸலன்ஸ் அண்ட் ரிசர்ச் குரூப் வழங்கும் ‘விமன் ஐகான்ஸ் ஆசியா’ விருதையும், துபாயில் நடந்த ஏசியன் லீடர்ஷிப் அவார்ட்ஸில் ‘2023ம் ஆண்டின் சிறந்த ஆசிய கட்டிடக் கலைஞர்’ விருதையும் பெற்றுள்ளார்.