சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், தவெக புதுக்கோட்டை மாவட்ட செயலாளருமான சி.விஜயபாஸ்கரிடம் அதிகாரிகள் சுமார் 9 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். கடந்த 2016 முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தில் அவர் அமைச்சராகப் பதவி வகித்த போது, வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கின் தொடர்ச்சியாக இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகப் சி.விஜயபாஸ்கர் பதவி வகித்த காலத்தில், வரம்புக்கு மீறி கோடிக்கணக்கில் சொத்துகள் குவிக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. இதன் அடிப்படையில் தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) காவல்துறையினர் அவர் மீதும் அவரது மனைவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், இதுதொடர்பான குற்றப்பத்திரிகையில் சுமார் ரூ.35.79 கோடி வரை முறைகேடாகச் சொத்து சேர்க்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில்தான் அமலாக்கத்துறை தற்போது சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்காகப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
முன்னதாக அமலாக்கத்துறை தரப்பில் ஆஜராகும்படி சி.விஜயபாஸ்கருக்குச் சம்மன்கள் அனுப்பப்பட்டிருந்தன. சில காரணங்களால் முந்தைய சம்மனின் போது அவர் ஆஜராகாததைத் தொடர்ந்து, தற்போது இரண்டாவது முறையாக அனுப்பப்பட்ட புதிய சம்மனின் அடிப்படையில் அவர் விசாரணைக்கு நேரில் ஆஜரானார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் காலை தொடங்கி இரவு வரை அவரிடம் அதிகாரிகள் தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பினர்.
அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் வாங்கிய சொத்துகள், வெளிநாட்டு முதலீடுகள் அல்லது இதர பணப் பரிமாற்றங்கள் குறித்து முந்தைய ஆவணங்களின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அமலாக்கத்துறை விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களுக்கும், தற்போதைய வருமான ஆதாரங்களுக்கும் இடையே உள்ள முரண்பாடுகள் குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இச்சூழ்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய அடுத்த கட்ட நடவடிக்கைகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரமாகப் பரிசீலித்து வருகின்றனர்.