ரூ. 100 கோடி பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ்-ஐ நவம்பர் 6-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவு. இரண்டு மணி நேர விசாரணை நிறைவுற்ற நிலையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி சத்யமூர்த்தி உத்தரவு.
சிறப்பு நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் புழல் சிறையில் அடைக்கப்படுகிறார். சிறையில் அன்பில் மகேஷ்-க்கு முதல் வகுப்பு வழங்கவும், அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு சிறையில் எண்ணெய் மற்றும் புரொட்டீன் இல்லாத உணழு வழங்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
லஞ்ச புகாரில் கைது:
முன்னதாக தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்காக அன்பில் மகேஷ் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மருத்துவ பரிசோதனை நிறைவடைந்த நிலையில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல். எஸ். சத்யமூர்த்தி முன் ஆஜர்படுத்தப்பட்ட அன்பில் மகேஷ்-ஐ விசாரணைக்கு எடுக்க அனுமதி கோரி காவல் துறை தரப்பில் வாதிடப்பட்டது. மறுபுறம், அன்பில் மகேஷ்-க்கு ஜாமீன் வழங்கக்கோரி தி.மு.க. வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார்.
வழக்கு விவரம்:
முன்னதாக முந்தைய தி.மு.க. ஆட்சி காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டி.டி.சி.பி., சி.எம்.டி.ஏ. அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்று தருவதாக கூறி, ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகள் சங்க தலைவர் பி.டி. அரசகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமின் வழங்கக் கோரி, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அன்பில் மகேஷ்-க்கு முன்ஜாமின் வழங்க முடியாது, அவரது மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று கூறினார். சென்னை உயர்நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர்.