2026 உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் கனடா, மெக்ஸிகோ, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை நேரிலும், தொலைக்காட்சி வாயிலாகவும் கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்டுகளித்து வருகிறார்கள். இந்த போட்டியை முன்னெடுத்து செல்லும் வகையில் பல்வேறு விழிப்புணர்வுகள் அனைவரையும் கவர்ந்துள்ளது.
அந்த வகையில் உலக கோப்பை போட்டியில் விளையாடும் கால்பந்து வீரர்களை கவுரவிக்கும் விதமாகவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் ராமநாதபுரத்தில் உள்ள பிரபல தனியார் பேக்கரி ஒன்றில் வீரர்களின் டீ-சர்ட் ஜெர்சியை கேக் மூலம் அச்சு அசலாக போன்ற வடிவமைத்து பொதுமக்களின் பார்வைக்காகவும் ஆர்டர்களின் பெயரில் தயார் செய்தும் கொடுத்து வருகின்றனர்.
இதனை ராமநாதபுரம் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர். குறிப்பாக இந்த பேக்கரியில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கிரிக்கெட் போட்டி மற்றும் தேசிய தலைவர்கள் உள்ளிட்டோரையும் முழு கேக்கில் சிலையாக வடிவமைத்து பார்வைக்காக வைத்து வருகிறார்கள்.
அதேபோன்று இந்த ஆண்டு தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் விளையாடும் சிறந்த வீரர்களான மெஸ்சி, ரொனால்டோ, நெய்மர் உள்ளிட்டோரை ஊக்கப்படுத்தும் விதமாகவும், கவுரவிக்கும் விதமாகவும் முழு வடிவிலான டீ-சர்ட்டை கேக்குகளில் வடிவமைத்துள்ளனர்.
முன்னணி வீரர்களின் ஜெர்சியை டீ-சர்ட்களாக கேக்கில் வடிவமைப்பு செய்துள்ளதை பார்த்துவிட்டு ஏராளமான வாடிக்கையாளர்கள் இதேபோன்று வடிவமைப்பில் கேக் செய்து தர வேண்டும் என கேட்டு வாங்கி செல்கிறார்கள். குறிப்பாக மூன்று கிலோ முதல் 12 கிலோ வரை இதனை தயார் செய்ய முடியும் என பேக்கரி நிறுவனத்தார் தெரிவித்துள்ளனர்.