நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் தமிழக காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இன்று காலை நூதனப் போராட்டம் நடைபெற்றது.
மாநில கொள்கை பரப்பு செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் விஜயராஜ், மாவட்ட செயலாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர் கடன்கள் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்தாமல், மவுனம் காக்கும் மத்திய அரசை கண்டித்தும் கடற்கரையில் திதி கொடுத்தனர். பின்னர் பிண்டம் கடலில் கரைத்து கோஷங்கள் எழுப்பி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். நாகை கடற்கரையில் நடந்த இந்த நூதன போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.