தமிழகத்திற்கு கடந்த வாரம் கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டபோது தங்கள் மனநிலை எப்படி இருந்தது என்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு மக்கள் பதிலளித்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. பின்னர் இரவில் அது வாபஸ் பெறப்பட்டது.
இதனிடையே அன்றைய தினம் ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட பின் சென்னைவாசிகளின் செல்போன்களில் திடீரென உரத்த சைரன் சத்தத்துடன் அவசரகால எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுமக்களின் போன்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் "செல் பிராட்காஸ்ட்" (Cell Broadcast Technology) தளம் வழியாக அவசரகால எச்சரிக்கை குறுஞ்செய்தி அன்றைய தினம் அனுப்பப்பட்டது.
அப்போது போன்கள் சைலண்ட் மோடில் இருந்தபோதிலும், எதிர்பாராத விதமாக மிக உரத்த சத்தத்துடன் சைரன் அலாரமும், கடுமையான அதிர்வும் ஏற்பட்டதால் சென்னைவாசிகள் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் கனமழை கொட்டித் தீர்க்கும் என்ற அச்சமும் அவர்களை தொற்றிக்கொண்டது. பின்னர் ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டபோது தான் நிம்மதி அடைந்தனர்.
இந்நிலையில் இந்த ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது குறித்து மக்கள் தங்கள் மனநிலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
மாலைமலர் சார்பில் சென்னை வாசிகளிடம் "ரெட் அலர்ட் விடுக்கப்பட்டவுடன் பயந்தீர்களா?" என கேள்வி எழுப்பட்டது. அதற்கு ஒரு சாரார் தங்களுக்கு அச்சம் ஏற்பட்டது என்றும் ஒரு சாரார் அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டதாகவும் தத்தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
ரெட் அலர்ட்டால் பயப்பட்டீர்களா என்ற கேள்விக்கு ஆம் என 7 பேரும், இல்லை என 16 பேரும் மாலைமலருக்கு பதில் அளித்தனர்.