தமிழக செய்திகள்

மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டண வசூல்: தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க பிரேமலதா வலியுறுத்தல்!

நான்கரை ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பிற்கு 5 ஆண்டு கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க பிரேமலதா வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவக் கல்லூரிகளில், மாணவர்களிடமிருந்து கூடுதல் கல்விக்கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதாவும் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தின் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. தேசிய மருத்துவ ஆணையம் விதிமுறைப்படி கல்லூரிகள் 5 அல்லது 5.5 ஆண்டுகளுக்குக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் திட்டவட்டமாகக் கூறியுள்ளன. எம்.பி.பி.எஸ் படிப்பின் கல்விக்காலம் நான்கரை ஆண்டுகள் மட்டுமே. ஆனால், சில மருத்துவக் கல்லூரிகள் ஐந்து ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணத்தை வசூலிப்பதாக கூறப்படுகிறது. இது மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் கூடுதல் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்துவதுடன், நியாயமான நடைமுறையாகவும் தெரியவில்லை.

எனவே, விதிமுறைகளை மீறி கூடுதல் கட்டணம் அல்லது நான்கரை ஆண்டுகள் மட்டுமே கல்விக்காலம் இருந்தும் ஐந்து ஆண்டுகளுக்கான கட்டணத்தை வசூலிக்கும் மருத்துவக் கல்லூரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மருத்துவக் கல்வித் துறை மற்றும் அதனைச் சார்ந்த அமைச்சர் இந்த விவகாரத்தை நேரடியாகக் கண்காணித்து, இனி இதுபோன்ற தவறுகள் எந்த மருத்துவக் கல்லூரியிலும் நடைபெறாத வகையில் கடுமையான கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்று கூறியுள்ளார்.