தமிழக செய்திகள்

சென்னை புழலில் இருந்து இரு கைதிகள் தப்பிய விவகாரம் - சிறைக் காவலர்கள் 6 பேர் பணியிடை நீக்கம்!

இடமாற்றத்துக்கும் 2 கைதிகள் தப்பிய விவகாரத்துக்கும் தொடர்பு உள்ளதா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஆசியாவிலேயே மிகப் பெரிய சிறைச்சாலை என்கிற சிறப்புடன் செயல்பட்டு வரும் புழல் சிறையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள், பெண் கைதிகள் ஆகியோர் தனித்தனியாக வைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

2 கைதிகள் தப்பியோட்டம்

இந்த நிலையில் நேபாளத்தைச் சேர்ந்த விசாரணை கைதியான சுதீப் போகதி மற்றும் போக்சோ வழக்கில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டிருந்த சுரேஷ் ஆகிய இருவரும் அடுத்தடுத்து சிறையில் இருந்து தப்பிச் சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து சிறைத் துறை கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் சிறைத் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இரண்டு கைதிகளையும் பிடிப்பதற்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

கைது

இதைத் தொடர்ந்து பாடி பகுதியில் சுதீப் போகதி வசித்து வந்த இடத்திற்கு சென்று விசாரித்த போலீசார், விடிய விடிய தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் அண்ணாநகர் பகுதியில் இன்று காலை கடை ஒன்றில் டீக்குடித்துக் கொண்டிருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் இதுதொடர்பாக சிறைத் துறை சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிறைத்துறை காவலர்களால் கைது செய்யப்பட்ட நிலையில் புழல் போலீசாரும் அவரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

மேலும் மற்றொருவரை தேடும் பணியும் நடைபெற்று வருகிறது.

சிறைக்காவலர்கள் 6 பேர் பணிநீக்கம்

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக, கைதிகள் தப்பிய போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த சிறைக்காவலர்கள், வார்டன்கள் 6 பேரை இடைநீக்கம் செய்து கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சிறையில் சமீபத்தில் அதிகாரிகள் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த இடமாற்றத்துக்கும் 2 கைதிகள் தப்பிய விவகாரத்துக்கும் தொடர்பு உள்ளதா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT