மின்சாரம் நிறுத்தம் 
தமிழக செய்திகள்

எருமையூர் பகுதியில் 2 நாட்களாக மின்சாரம் துண்டிப்பு- பாம்புகள் படையெடுப்பதால் பொதுமக்கள் பீதி

மின்தடை காரணமாக கடந்த 2 நாட்களாக குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் விடுப்பு எடுத்துள்ளனர்.

மின்தடை

சோமங்கலம் அடுத்த எருமையூர் கன்னியம்மன் கோவில் தெரு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக நீடித்து வரும் கடுமையான மின் தடையால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வாரந்தோறும் இது போன்ற மின் தடை தொடர்ந்து ஏற்படுவதாகவும், இதனால் தங்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் கூறியதாவது:-

தூங்க முடியவில்லை

எங்கள் பகுதியில் 2 நாட்களாக மின்சாரம் இல்லை, தண்ணீரும் இல்லை. வேலைக்குச் சென்றுவிட்டு வந்து எங்களால் நிம்மதியாக தூங்கக்கூட முடியவில்லை. அவசரத்திற்கு யாரிடமாவது போனில் பேச வேண்டும் என்றால் கூட போனில் சார்ஜ் இல்லை.

சார்ஜ் போடுவதற்கு கூட எங்கு போவது என்று தெரியாமல் தவித்து வருகிறோம். மின் வாரியத்திற்கு போன் செய்தால் அவர்கள் போனை எடுப்பதே இல்லை. ஒருமுறை போனை எடுத்தாலும், ‘சரி செய்து விடுகிறோம்’ என்று கூறுகிறார்களே தவிர, இதுவரை யாரும் வந்து பார்க்கவில்லை.

குழந்தைகள் நள்ளிரவு மின்சாரம் போனதில் இருந்து தூங்காமல் தவித்து வருகிறார்கள். கொசுக்கடியிலும், புழுக்கத்திலும் குழந்தைகள் எப்படி தூங்குவார்கள் அவர்களுக்கு ஏதாவது உடலநலம் பாதிக்கப்பட்டால் நாங்கள் என்ன செய்வது? மற்ற இடங்களுக்கு எல்லாம் உடனே மின்சாரத்தை சரி செய்யும் அதிகாரிகள், எங்கள் பகுதியை மட்டும் ஏன் கண்டு கொள்வதில்லை?

பணம்

மின்சாரத்தை சரி செய்ய வரும்போது பணம் கேட்கிறார்கள். ஒரு குடும்பத்தில் வசதி இருக்கும், மற்றொரு குடும்பத்தில் இருக்காது, அப்படி இருக்கும்போது எங்களால் எப்படி பணம் கொடுக்க முடியும். இப்பகுதி மலையை ஒட்டி இருப்பதால், இருட்டில் பாம்புகள் மற்றும் பூச்சிகள் படையெடுக்கும் அபாயம் இருக்கிறது. குழந்தைகளை வீட்டிற்குள் வைத்திருக்கவே பயமாக இருக்கிறது. மின்தடை காரணமாக கடந்த 2 நாட்களாக குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் விடுப்பு எடுத்துள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இப்பகுதியில் சுமார் 20 முதல் 30 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், தங்களின் அடிப்படைப் பிரச்சினைக்கு மின் வாரியமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.