தமிழக செய்திகள்

பராமரிப்பு பணிகளுக்காக ஈரோடு- செங்கோட்டை ரெயில் திடீர் நிறுத்தம்!

ஜூலை 10, 14 மற்றும் 18 ஆகிய தேதிகளில், இந்த ரெயில் கரூர் ரெயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.

சேலம் மற்றும் மதுரை ரெயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ரெயில் பாதைகளைப் புதுப்பித்தல், மேல்நிலை மின் கட்டமைப்புகளைப் பராமரித்தல் மற்றும் ரெயில்வே பாலங்கள் சீரமைத்தல் போன்ற பல்வேறு பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்பணிகளை துரிதப்படுத்தும் வகையில், ஈரோடு - செங்கோட்டை இடையிலான ரெயில் சேவையில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தென்னக ரெயில்வேயின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஈரோடு - செங்கோட்டை விரைவு ரெயில் (ரயில் எண்: 16845) இன்று மற்றும் 15, 22, 29 ஆம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

இந்த ரெயில் நாளை 9ஆம் தேதி, 10, 11, 12, 13, 16, 17, 18, 19, 20, 23, 24, 25, 26, 27, 30, 31 ஆகிய தேதிகளிலும், ஆகஸ்ட் 1, 2, 3, 5, 6ம் தேதிகளில் திண்டுக்கல் - செங்கோட்டை இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.

இந்த ரெயில் ஆகஸ்ட் 10, 14, 18 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ஈரோடு - கரூர் இடையே பகுதியளவு ரத்து செய்யப்பட உள்ளது. இதேபோல மறுமார்க்கத்தில் செங்கோட்டை - ஈரோடு விரைவு ரெயில் (ரெயில் எண்:16846) நாளை 9ம் தேதி மற்றும் 16, 23, 30ம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

மேலும் இந்த ரெயில் ஜூலை 10, 11, 12, 13, 14, 17, 18, 19, 20, 21, 24, 25, 26, 27, 28, 31 மற்றும் ஆகஸ்ட் 1, 2, 3, 4, 6, 7 ஆகிய தேதிகளில், செங்கோட்டை முதல் திண்டுக்கல் வரை ரெயில் சேவை பகுதியளவு ரத்து செய்யப்படும்.

ஜூலை 10, 14 மற்றும் 18 ஆகிய தேதிகளில், இந்த ரெயில் கரூர் ரெயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.

பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததும், ரெயில் எண் 16846 செங்கோட்டை - ஈரோடு எக்ஸ்பிரஸ் ரெயிலின் அதே நிறுத்தங்களுடன், கரூர் முதல் ஈரோடு வரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயிலாக இந்த ரெயில் இயக்கப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீரென ஈரோடு- செங்கோட்டை இடையே இரு மார்க்கத்திலும் இயக்கப்பட்டு வந்த இந்த ரெயில் இரண்டு மாதங்களுக்கு போதிய அளவில் இயக்கப்படாமல் நிறுத்தப்படுவது ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, தென்காசி மாவட்ட பயணிகளை வெகுவாக பாதித்துள்ளது.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ஈரோடு - செங்கோட்டை மற்றும் செங்கோட்டை- ஈரோடு ஆகிய இரு மார்க்கத்திலும் இயக்கப்படும் இந்த ரெயில் தென் மாவட்டங்களையும் மேற்கு மாவட்டங்களையும் இணைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ரெயிலாகும். லட்சக்கணக்கான மக்கள் இந்த ரயிலை பயன்படுத்தி வரும் நிலையில் திடீரென 2 மாதங்களுக்கு இந்த ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்திருப்பது பயணிகளை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது. கொரோனா காலத்தில் இந்த ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டு நீண்ட இடைவெளிக்குப்பின் இப்போதுதான் இயக்கப்படுகிறது. தற்போது இந்த ரெயிலை நிறுத்தி வைப்பது பயணிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் மீண்டும் பழையபடி இந்த ரெயிலை தொடர்ந்து இயங்க தென்னக ரெயில்வே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.