எல்நினோ தாக்கத்தால் இந்த ஆண்டு கனமழை பெய்யும். அதனால் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு நிபுணர் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் எல்நினோவால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து ஆராய்வதற்காக தமிழக அரசு நிபுணர் ஆலோசனை குழுவை அமைத்தது.
அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழுவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 7 நிபுணர்கள் இடம்பெற்று உள்ளனர்.
எல்நினோவின் சாத்தியமான நிலைகளை மதிப்பிட்டு, தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைகளை வழங்குவதே இந்தக் குழுவின் முக்கிய நோக்கமாகும். இந்த குழுவின் முதல்கட்ட பரிந்துரைகள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன.
அந்த பரிந்துரையில் கூறியிருப்பதாவது:-
* எல்நினோவை எதிர்கொள்ளும்போது வறட்சி ஏற்படும் என்று மட்டும் கருதி தமிழக அரசு திட்டமிடக்கூடாது. 2026-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது சில பகுதிகளில் கனமழை பெய்து நகர்ப்புற வெள்ளம், ஆற்றுவெள்ளம், கடலோர வெள்ளம் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அதே நேரத்தில் சில பகுதிகளில் மழை குறைந்து நீர்த்தேக்கங்களுக்கு நீர்வரத்து குறையவும், குடிநீர் மற்றும் பாசனத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. மேலும், 2027-ம் ஆண்டு கோடையில் கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை ஏற்படக்கூடிய நிலைமையையும் கருத்தில் கொண்டு, இந்த அனைத்து பாதிப்புகளையும் எதிர்கொள்ளும் வகையில் தமிழக அரசு முன்கூட்டியே தயாராக வேண்டும்.
* 2027-ம் ஆண்டு கோடையை கருத்தில் கொண்டு, நீரை சிக்கனமாக பயன்படுத்தக் கூடிய, குறுகிய காலத்தில் அறுவடைக்கு வரும், வெப்பம் மற்றும் வறட்சியை தாங்கள் கூடிய பயிர் ரகங்களை ஊக்குவிக்க வேண்டும். தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்களின் சாகுபடியை பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* 2027-ம் ஆண்டு வெப்ப அலை ஏற்படக்கூடிய பகுதிகளில் அரசு கட்டிடங்கள், பள்ளிகள் உள்ளிட்டவற்றை வெப்பத்தை தாங்கும் வகையில் மேம்படுத்த வேண்டும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வெப்பத்தை குறைக்கும் கூரை அமைப்புகள் மற்றும் சூரிய வெப்பத்தை பிரதிபலிக்கும் மேற்பரப்புகளை பயன்படுத்த வேண்டும்.
2026-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக ஆறுகள், கால்வாய்கள், மழை நீர் வழித்தடங்கள், நீர்த்தேக்கங்கள், அணைகள், மதகுகள் மற்றும் கரைகளை ஆய்வு செய்து, பழுதடைந்த பகுதிகளில் அவசர சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆறுகள், கால்வாய்கள் மற்றும் முக்கிய வடிகால்களில் உள்ள வண்டல் மண், குப்பைகளை அகற்ற வேண்டும்.
* பேரிடர் தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்களை பொதுமக்களுக்கு தமிழில் விரைவாக வழங்க வேண்டும். குறுஞ்செய்தி, வானொலி, சமூக ஊடகங்கள் உள்ளிட்டவற்றின் மூலம், குறிப்பிட்ட மாவட்டம் மற்றும் வட்டாரத்தில் நிலவும் ஆபத்துக்கு ஏற்ப எச்சரிக்கைகளை வெளியிட வேண்டும். ஏற்கனவே வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.