தமிழக செய்திகள்

ஒற்றுமையுடன் செயல்பட்டு துரோகிகளை வீழ்த்த வேண்டும்- நிர்வாகிகளிடம் இ.பி.எஸ். பேச்சு

அம்மா ஆட்சி காலத்தில் அ.தி.மு.க.வில் இருந்தது போன்று இளம்பெண்களின் செல்வாக்கை நாம் மீண்டும் பெற வேண்டும்.

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்த பிறகு அந்த கட்சியில் இருந்து முன்னணி நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரும் விலகி த.வெ.க.வில் இணைந்து வருகிறார்கள். 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில் அந்த தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

ஆலோசனை கூட்டம்

இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முதல் ஆலோசனை நடத்தி வருகிறார். 5 நாட்கள் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. செங்கல்பட்டு கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் வேலூர் மாவட்ட அ.தி.மு.க.வினருடன் நேற்று ஆலோசனை நடத்திய அவர் இன்று திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தார். இந்த ஆலோசனையின் போது எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து விலகி செல்பவர்கள் பற்றி கவலைப்படாதீர்கள் என்றும் பதவி சுகத்தை அனுபவித்து விட்டு செல்லும் துரோகிகளை வரும் காலங்களில் தேர்தலில் வீழ்த்தும் வகையில் நீங்கள் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இளம்பெண்கள்

அம்மா ஆட்சி காலத்தில் அ.தி.மு.க.வில் இருந்தது போன்று இளம்பெண்களின் செல்வாக்கை நாம் மீண்டும் பெற வேண்டும். அதற்காக இளம்பெண்கள் மற்றும் இளைஞர்களை மேலும் அதிகளவில் கட்சியில் சேர்த்து அ.தி.மு.க.வை பலப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் சார்பு அணிகளை சேர்ந்த நிர்வாகிகளோடு மாவட்டச் செயலாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வரும் காலங்களில் அ.தி.மு.க. வெற்றிக்காக உழைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

சட்டமன்ற தேர்தலில் த.வெ.க.வை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தி.மு.க.வை மட்டுமே எதிரியாக நினைத்து செயல்பட்டோம். சமூக வலைதளங்கள் இன்று அரசியல் களத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனை மனதில் வைத்துக் கொண்டு அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவினர் செயல்பட வேண்டும்.

ஆளும் கட்சியின் குறைகள், கடந்தகால அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் ஆகியவற்றை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் மூலம் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தனது பேச்சின் போது குறிப்பிட்டு உள்ளார்.

விராலிமலை

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளையும் நேற்று அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் வைத்து எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் போட்டியிட்டு வெற்றி பெற்ற விராலிமலை தொகுதியில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்ய கடுமையாக உழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த ஆலோசனையின் போது விஜயபாஸ்கருக்கு பதிலாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் பழனிவேல் மற்றும் பல்வேறு நிர்வாகிகளும் பங்கேற்றனர். அவர்களும் விராலிமலை தொகுதியில் நிச்சயம் இரட்டை இலையை வெற்றி பெற செய்வோம் என்று எடப்பாடி பழனிசாமியிடம் உறுதி அளித்தனர்.