தமிழக செய்திகள்

எடப்பாடி பழனிசாமி 15-ந்தேதி முதல் மீண்டும் ஆலோசனை

மறுநாள் 16-ந்தேதி காலை 10 மணிக்கு புதுக்கோட்டை வடக்கு, தெற்கு, கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சி நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

கடந்த 3-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை தொடர்ச்சியாக பல்வேறு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி தேர்தல் தோல்வி பற்றி கட்சியினர் யாரும் கவலைப்பட வேண்டாம். நமக்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் உள்ளது என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மீண்டும் ஆலோசனை

இந்த நிலையில் வருகிற 15-ந்தேதி முதல் 3 நாட்கள் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்துகிறார். அன்று காலை 10 மணிக்கு ஈரோடு புறநகர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகளுடனும், 11.30 மணிக்கு திருவள்ளூர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தும் அவர், மாலையில் தேனி கிழக்கு, மேற்கு மாவட்ட அ.தி.மு.க.வினருடன் கலந்துரையாடுகிறார்.

மறுநாள் 16-ந்தேதி காலை 10 மணிக்கு புதுக்கோட்டை வடக்கு, தெற்கு, கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. 11.30 மணிக்கு கடலூர் கிழக்கு, வடக்கு மாவட்ட நிர்வாகிகளுடனும் மாலை 4.30 மணிக்கு கடலூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகளுடனும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். 18-ந்தேதி காலை 10 மணிக்கு கரூர் மாவட்ட நிர்வாகிகளுடனும், 11.30 மணிக்கு நீலகிரி மாவட்ட நிர்வாகிகளுடனும், அன்று மாலை 4.30 மணிக்கு விருதுநகர் கிழக்கு, மேற்கு மாவட்ட நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமி நடத்தும் ஆலோசனையில் பங்கேற்கிறார்கள்.

இது தொடர்பாக அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்தும், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டங்களில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புறக்கணிப்பு

எடப்பாடி பழனிசாமி நடத்தி வரும் இந்த தொடர் ஆலோசனைக் கூட்டங்களை எம்.எல்.ஏ.க்கள் பலர் புறக்கணித்துள்ளனர். ஏற்கனவே அ.தி.மு.க.வில் இருந்து 6 எம்.எல்.ஏ.க்கள் விலகி த.வெ.க.வில் சேர்ந்து உள்ள நிலையில் இந்த புறக்கணிப்பு மீண்டும் அக்கட்சியில் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் நடத்தும் ஆலோசனை கூட்டங்களில் கட்சி நிர்வாகிகள் பங்கேற்பார்களா? என்ற கேள்வியும் எழுந்து உள்ளது.