சட்டசபை தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணி தயாராகி வருகிறது. தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே இருப்பதால் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை அ.தி.மு.க. தொடங்க உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் தற்போது பா.ஜ.க., பா.ம.க., அ.ம.மு.க., த.மா.கா. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
அ.தி.மு.க.விடம் இருந்து குறைந்தபட்சம் 30 தொகுதிகளை பெற வேண்டும் என்பதில் பா.ஜ.க. தீவிரம் காட்டி வருகிறது. அதே நேரத்தில் அ.தி.மு.க. தரப்பில் 27 இடங்கள் வரை ஒதுக்க முன் வந்திருப்பதாக கூறப்படுகிறது. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளான பா.ம.க.வுக்கு 17 இடங்களும், அ.ம.மு.க.வுக்கு 9 இடங்களும், த.மா.கா.வுக்கு 4 இடங்களும் ஒதுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அ.தி.மு.க. 170 தொகுதிகளில் களம் காண இருப்பதாக கூறப்படுகிறது. கூட்டணியில் உள்ள தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் என்று தெரியவந்துள்ளது. இதற்கிடையே, கூட்டணியில் சேர்ப்பதற்காக டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சியுடன் அ.தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இது தொடர்பான தமிழக அளவிலான பேச்சுவார்த்தைகளில் முடிவு எட்டப்படவில்லை. இதனால், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த முடிவு எடுத்து எடப்பாடி பழனிசாமி நேற்று மதியம் டெல்லி புறப்பட்டு சென்றார்
பின்னர் இரவு அமித்ஷா இல்லத்துக்குள் சென்ற அவர் அமித்ஷாவை சந்தித்தார்.
இந்த பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க. தரப்பு முடிவுகளை எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அ.தி.மு.க. போட்டியிட விரும்பும் தொகுதிகள் அடங்கிய பட்டியலையும் அவர் கொடுத்ததாக தெரிகிறது. மீதம் உள்ள தொகுதிகளில் பா.ஜ.க.வுக்கு எத்தனை வேண்டுமோ?, அதை எடுத்துக்கொண்டு மற்ற கட்சிகளுக்கும் பங்கிடுமாறு அமித்ஷாவை அவர் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
பிற கட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டிய தொகுதிகள் பற்றியும் அவர்கள் ஆலோசித்து உள்ளனர்.
இந்நிலையில் டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
* பா.ஜ.க.வுடன் நாளை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும்.
* தொகுதி பங்கீட்டில் எந்த சிக்கலும் இல்லை.
* புதிய கட்சிகள் வர வாய்ப்பில்லை.
* தொகுதி பங்கீடு குறித்து பேச பியூஷ் கோயல் நாளை சென்னை வருகிறார்.
* என்.டி.ஏ. கூட்டணிக்கு அ.தி.மு.க.தான் தலைமை.
* அடுத்த 4 நாட்களில் தொகுதி பங்கீடு குறித்த அனைத்து பேச்சுவார்த்தைகளும் நிறைவு பெறும்.
* கூட்டணி கட்சிகளில் யார் யாருக்கு எந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளதோ அங்கு வாய்ப்பு வழங்கப்படும்.
* இன்னும் ஒரு வாரத்தில் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.
* த.வெ.க. தலைவர் விஜயுடன் நாங்களோ, பா.ஜ.க.வோ கூட்டணியோ பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.