பாஜகவின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக எந்த அடிப்படையில் ஆதரவு தெரிவித்துள்ளது என்பதை அக்கட்சியின் தலைவர் தெளிவுபடுத்த வேண்டியது அவருடைய பொறுப்பு என அவர் வலியுறுத்தினார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்களை நிறைவேற்றுவதில் மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், இதற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ள நிலைப்பாட்டையும், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வெளியான அறிக்கையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கடுமையாக விமர்சித்துள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சிக் கோட்பாடு சார்ந்த முக்கியக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
பாராளுமன்றக் கூட்டத்தொடர் 100 நாட்களைக் கடந்தும் ஒத்திவைக்கப்படாமல், சர்ச்சைக்குரிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய பாஜக அரசு பல்வேறு கட்சிகளின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் பிடிவாதமாக ஈடுபட்டு வருவதாக பெ.சண்முகம் குற்றம் சாட்டினார். பாஜகவின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக எந்த அடிப்படையில் ஆதரவு தெரிவித்துள்ளது என்பதை அக்கட்சியின் தலைவர் தெளிவுபடுத்த வேண்டியது அவருடைய பொறுப்பு என அவர் வலியுறுத்தினார்.
ஏற்கனவே திமுக ஆட்சியில் இருந்தபோது கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், 1972-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் உள்ள தமிழ்நாட்டின் 7.18 சதவீத பிரதிநிதித்துவம் எக்காரணம் கொண்டும் குறையக் கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அவர் நினைவுகூர்ந்தார். தற்போது அந்தப் பிரதிநிதித்துவ சதவீதம் குறையாது என்பதற்கு பாஜக தரப்பிலிருந்து திமுக தலைவருக்கு என்ன புதிய உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது என்பதை அவர் மக்களுக்கு விளக்க வேண்டும் என்றும் பெ. சண்முகம் கேள்வி எழுப்பினார்.
திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்துப் பேசிய அவர், திமுகவின் வரலாற்றிலேயே வேறு எந்தப் பிரச்சனையிலும் இவ்வளவு மிக மோசமான ஒரு அறிக்கை வெளியானதில்லை என ஆவேசமாகத் தெரிவித்தார். கடந்த 20-ஆம் தேதி வெளியான உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல், தாமதமாக வெளியிட்ட அறிக்கையிலும் தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது என்று மட்டுமே கேள்வி எழுப்பப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு இருக்கும்போதே, மாநிலத்திற்குள் மத்திய பாதுகாப்புப் படையான சிஆர்பிஎப் படைகளை அனுப்புவதும், மலையை நீதிபதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வதும் இந்திய கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கும் மாநில உரிமைக்கும் விடப்பட்ட மிகப்பெரிய அச்சுறுத்தல் என அவர் எச்சரித்தார். உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து ஒரு வார்த்தை கூடக் குறிப்பிடாமல் வெளியிடப்பட்ட அறிக்கை மிக மோசமானது என்றும், திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் பெ.சண்முகம் வலியுறுத்தினார்.