தமிழக செய்திகள்

அனிதா ராதாகிருஷ்ணனிடம் 6 மணி நேரம் விசாரணை ஏன்? - திமுக நிர்வாகி

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணையுமாறு அனிதா ராதாகிருஷ்ணன் வற்புறுத்தப்பட்டுள்ளார்.

பாஜக பயன்படுத்தும் அதே யுக்தியை தான் தற்போது தவெகவும் பயன்படுத்துவதாக திமுக நிர்வாகி பரந்தாமன் குற்றம் சாட்டி உள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக வழக்கறிஞர் அணி இணை செயலர் பரந்தாமன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* அனிதா ராதாகிருஷ்ணன் மீது பொய்யான வழக்குப்பதிவு செய்ததன் மூலம் குதிரை பேரம் அம்பலமாகி உள்ளது.

* பாஜக பயன்படுத்தும் அதே யுக்தியை தான் தற்போது தவெகவும் பயன்படுத்துகிறது.

அனிதா ராதாகிருஷ்ணன் கைது

* அவதூறு வழக்கில் கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

* அவதூறு வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணனை 6 மணி நேரம் விசாரணை செய்ய வேண்டியது ஏன்?

* எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணையுமாறு அனிதா ராதாகிருஷ்ணன் வற்புறுத்தப்பட்டுள்ளார்.

* நீதிமன்றத்தால் தவெகவின் மூக்கு அறுக்கப்பட்டிருக்கிறது.

* தினந்தோறும் திமுக மீது என்ன பழி போடலாம் என தவெக அரசு யோசித்துக்கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் தி.மு.க. சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கடந்த மாதம் 20-ந் தேதி நடந்தது.

அவதூறு பேச்சு

இதில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

அப்போது அவர், த.வெ.க. தலைவரும். முதலமைச்சருமான விஜய்யை ஒருமையிலும், அவதூறாகவும் பேசினார். இதுகுறித்து த.வெ.க. நகர செயலாளர் செல்வகுமார் அளித்த புகாரின்பேரில், ஆத்தூர் போலீசார் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மீது பி.என்.எஸ். 352, 353/2 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

முன்ஜாமின் தள்ளுபடி

இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில், அனிதா ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நேற்று காலை விசாரணைக்கு வந்தது.

போலீஸ் தரப்பில், "அமைச்சராக பதவி வகித்த அனிதா ராதாகிருஷ்ணன் கட்டுப்பாடுடன் கருத்துகளை தெரிவிக்க வேண்டும். அவர் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருந்திருந்தால், இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டிருக்கும். அதனால், அவருக்கு முன்ஜாமின் வழங்கக்கூடாது" என்று வாதிடப்பட்டது.

அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய விவரங்கள் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட்டது. இதை படித்து பார்த்த நீதிபதி, "1967-ம் ஆண்டுக்கு பின் தமிழ்நாட்டில் சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் தான் ஆட்சி செய்திருக்கிறார்கள். நாம் தான் வாக்களித்து அவர்களை தேர்ந்தெடுத்தோம். மனுதாரர் சாதாரண குடிமகன் அல்ல. எம்.எல்.ஏ.வாக உள்ளவர். முதலமைச்சருக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியாதா? அவர் ஏன் இதுபோல பேச வேண்டும்" என்று கேள்வி எழுப்பினார். பின்னர், அவருக்கு முன்ஜாமின் வழங்க மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

கைது நடவடிக்கை

தொடர்ந்து அனிதா ராதாகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணனிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு

தூத்துக்குடி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனை இதய சிகிச்சை பிரிவு டாக்டர் ராஜவேல் முருகன் தலைமையில் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து திருச்செந்தூர் ஜூடீசியல் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார். இதனைத்தொடர்ந்து அவரை சொந்த ஜாமினில் விடுவித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

ரூ.10 ஆயிரம் செலுத்திவிட்டு சொந்த ஜாமினில் செல்லும்படி உத்தரவிட்ட மாஜிஸ்திரேட், அனிதா ராதாகிருஷ்ணன் 10 நாட்களுக்கு காவல் நிலையத்தில் கையெழுத்திடவும் உத்தரவு பிறப்பித்தார்.