அவை காவலர்களை அழைத்து அமளியில் ஈடுபடும் தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து அவைக் காவலர்கள் தி.மு.க. உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்றினர்.
தமிழ்நாடு சட்டசபையில் சர்காரியா அறிக்கை குறித்து நேற்று முதலமைச்சர் விஜய் பேசியது குறித்து அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தி.மு.க. தரப்பில் இன்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தனது தீர்ப்பை கூறினார். அதில்,
முதலமைச்சரின் பதிலுரையில் குறிப்பிட்ட எதையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது என்றார். இதையடுத்து சட்டசபையில் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய சபாநாயகர், இதுபொதுக்கூட்ட மேடை அல்ல, இது உங்கள் கட்சிக்கூட்டம் அல்ல. அவையின் மாண்பை எப்படி குறைக்க வேண்டும் என்று பயிற்சி எடுத்துக்கொண்டு தி.மு.க. உறுப்பினர்கள் வந்துள்ளீர்கள். பேரசையை நடத்தவிடாமல் தடை செய்யும் நோக்கத்திலேயே திமுக உறுப்பினர்கள் வந்துள்ளனர். தி.மு.க. கொறடா எ.வ.வேலு அல்லது கே.என்.நேரு பேச அனுமதி தருகிறேன் என்றார்.
சபாநாயகர் பேசிக்கொண்டு இருக்கும்போதே, அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும், நீக்க வேண்டும் என்று தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.
அப்போது பேசிய அவை முன்னவர் செங்கோட்டையன், 2 நாட்களாக பிரச்சனையில் ஈடுபடும் திமுக உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்றுங்கள் என்றார்.
இருப்பினும் சபாநாயகர், தி.மு.க. கொறடா எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுவதற்கு நான் அனுமதி தருகிறேன், அனைவரும் இருக்கையில் அமருங்கள் என பல முறை கூறினார். ஆனால் தி.மு.க. உறுப்பினர் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் அவை காவலர்களை அழைத்து அமளியில் ஈடுபடும் தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து அவைக் காவலர்கள் தி.மு.க. உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்றினர்.