தமிழகத்தில் 6 மாதத்திற்கு மேல் தவெக ஆட்சி இருக்காது. இருக்கவும் விடமாட்டோம் என திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
முதல்வர் விஜயை ஒருமையில் பேசிய புகாரில் திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார்.
ராதாகிருஷ்ணனிடம் கிட்டத்தட்ட 5 மணிநேரம் விசாரணை நடைபெற்றது. இதன் பின் அவர் நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைய சொல்லி போலீசார் மிரட்டுகின்றனர்’ என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்நிலையில் தற்போது அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு மீண்டும் அளித்துள்ள பேட்டியில்,
"நீங்கள் வேண்டுமென்றதால் தவெகவில் சேருங்கள். நாங்கள் உங்களுக்கு துணையாக இருக்கிறோம் என கூறினார்கள். நாங்கள் எதற்கும் பயப்பட மாட்டோம்.
இன்று வந்த ஒரு கட்சிக்கு நாங்கள் பயப்பட வேண்டுமா? எங்கள் தலைவர் தைரியமாக இருக்க சொல்லியிருக்கிறார். அந்த தெம்போடு எதையும் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்.
உங்களிடம் குதிரை பேரம் பேசப்பட்டதா என செய்தியாளர் கேட்க, அதற்கு பதிலளித்த அவர், ஒட்டக பேரமே பேசினார்கள். அதெல்லாம் என்னிடம் நடக்காது.
நான் ஒன்றும் முதல் போட்டு முதலமைச்சராக இல்லை. தளபதி ஸ்டாலினின் கட்டளைகளை நிறைவேற்றும் தொண்டனாக பணியாற்றுவதற்கு இருக்கிறேன். எதற்கும் அச்சப்பட மாட்டேன்.
இந்த விவகாரத்தில் 10ஆம் தேதி எனது வழக்கறிஞர் ஆஜராகி விளக்கம் அளிப்பதாக இருந்தது.
ஆனால் அதற்குள் என்னை உடனடியாக கைது செய்ய வேண்டும் என திட்டமிட்டு கைது செய்திருக்கிறார்கள். இந்த சலசலப்புக்கெல்லாம் நான் அஞ்ச மாட்டேன்.
இன்று எந்த மாதிரியான ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. தவெகவினரால் கஞ்சா வியாபாரம் நடத்தப்படுகிறது.
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளார். அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக ஆட்சி நடத்துகிறார்கள். இந்த ஆட்சி ரொம்ப நாள் நீடிக்காது. அதிகபட்சம் 6 மாதங்கள் தான் இருக்கும். நான் இதை சவாலாக சொல்கிறேன்.
நான் இருக்கும் திருச்செந்தூர் சுப்ரமணிய சாமி மீது ஆணையாக சொல்கிறேன். 6 மாதத்திற்கு மேல் இந்த ஆட்சி இருக்காது. இருக்கவும் விட மாட்டோம்." என தெரிவித்துள்ளார்.