தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வருகிறது. ஏற்கனவே, காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 5 தொகுதிகள், ம.தி.மு.க.வுக்கு 4, மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றுக்கு தலா 2 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, தே.மு.தி.க. ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த முறை 5 தொகுதிகள் ஒதுக்க தி.மு.க. தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஏற்றுக்கொள்ளவில்லை.
இதையடுத்து சென்னை அறிவாலயத்தில் தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின்போது, 5 தொகுதிகளுக்கு சம்மதிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
இதனால் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக - சிபிஎம் இடையே இழுபறி நீடிக்கிறது.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறியதாவது:-
திமுக கூட்டணியில் 5 தொகுதிகளைப் பெற்றுக் கொண்டு ஒத்துழைக்க வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.
முதலமைச்சரே சிரமங்களை விளக்கி வேண்டுகோள் விடுத்திருப்பதால் இது குறித்து எங்கள் கட்சியின் மாநிலக் குழுவில் ஆலோசித்து முடிவெடுப்போம்.
திமுக கூட்டணியில்தான் சிபிஎம் 2026 தேர்தலைச் சந்திக்கும். கொள்கைப் பூர்வமாக கூட்டணியில் நீடிக்கிறோம். தொகுதி எண்ணிக்கை பொறுத்து நீடிக்கலாமா? வேண்டாமா? என முடிவு செய்யும் கட்சியல்ல சிபிஎம்” என்றார்.
இந்நிலையில், திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை ஏற்க வேண்டும் என முதலமைச்சர் கேட்டது பற்றி விவாதிக்க நாளை மீண்டும் கூடுகிறது CPM மாநில செயற்குழு கூட்டம்.
சென்னையில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் தொகுதி எண்ணிக்கை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.