தமிழக செய்திகள்

திக்கு திசையெங்கும் ஊழல்..நமது குழந்தைகளை அடகு வைத்துவிட்டது திமுக- அமைச்சர் ராஜ்மோகன்

பள்ளிக்கல்வித்துறையில் சர்வதேச அளவில் தலைகுனிவை ஏற்படுத்திய யாரும் தப்பிக்கவே முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

சென்னை நீலாங்கரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகையினை முதலமைச்சர் விஜய் வழங்கி வருகிறார்.

சென்னை நீலாங்கரையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் விஜய், சிறப்பாக படித்து தேர்ச்சி பெற்ற மாணாக்கருக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். விழாவில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர் விஜய், கல்வியே மிகப்பெரிய சொத்து என்றும், மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தி எதிர்காலத்தில் சாதிக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு

விழாவில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், கடந்த கால ஆட்சி குறித்து கடுமையாக விமர்சித்தார். எங்கு பார்த்தாலும் ஊழல், திக்கு திசையெங்கும் ஊழல் என கடந்த கால ஆட்சி நடைபெற்றதாக குற்றம்சாட்டியுள்ளார். ஊழல் மலிந்த, ஊழல் அதிகமான ஆட்சியாக திமுக செயல்பட்டு வந்ததாகவும், பள்ளிக்கல்வித்துறையில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள், பெரியார் அறிவுலகத்தில் நடைபெற்ற ஊழலே அதற்கு சாட்சி என தெரிவித்தார்.

எல்லா துறைகளிலும் பெரிய ஊழல் நடந்ததாக கூறிய அவர், குறிப்பாக பள்ளிக்கல்வித்துறையில் தனியார் பள்ளிகளுக்கு சான்றிதழ் கொடுப்பதற்காக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கிட்டத்தட்ட 40 லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கியதாக குற்றம்சாட்டினார். இதற்காக இருவரை பணியில் அமர்த்தியதாகவும், இதனால் பாதிக்கப்பட்ட 177 பள்ளிகள் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவவித்துள்ளார்.

நம்முடைய குழந்தைகளை அடகு வைத்திருக்கிறது திமுக அரசு என்றும், பள்ளிக்கல்வித்துறையை அடகு வைத்து விட்டார்கள் என்றும் அவர் கடுமையாக சாடினார். நமது கல்வித்துறையை ஊழல் துறையாக மாற்றிவிட்டார்கள் என்றும், பள்ளிக்கல்வித்துறையில் சர்வதேச அளவில் தலைகுனிவை ஏற்படுத்திய யாரும் தப்பிக்கவே முடியாது என்றும் அவர் தெரிவித்தார். ஏஐ மூலம் ஊழல் செய்ததாக கூறப்படும் திமுக அரசில் நடைபெற்ற அத்தனை ஊழல்களும் ஒவ்வொன்றாக வெளியில் வந்து கொண்டிருப்பதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் தனது பேச்சை நிறைவு செய்தார். விழாவில் ஏராளமான மாணவர்கள், பெற்றோர்கள், தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT