கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் தடையில்லா சான்றிதழ் வழங்க லஞ்சம் பெறப்பட்டதாக, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலர் இளங்கோவன், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
தனியார் பள்ளிகளுக்கான அனுமதியை பெற ரூ.25 லட்சம் முதல் ரூ. 3 கோடி வரை லஞ்சம் வசூலிக்கப்பட்டதாக அப்புகாரில் தெரிவிக்கப்பட்டது.
விசாரணையில் தனியார் பள்ளிகளிடம் இருந்து லஞ்ச பணம் வசூலித்து கொடுத்தது திமுக பிரமுகரும், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் நிறுவனத் தலைவருமான பி. டி. அரசகுமார் எனத் தெரியவந்தது. இவர், தற்போது திமுக செய்தித் தொடர்பாளர் துறை பிரிவு துணைத் தலைவராக உள்ளார்.
தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடிக்கும் மேல் லஞ்சம் வாங்கியதாக இவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் பள்ளி நிர்வாகிகளிடம் இருந்து இவர் பெற்றத்தொகை ரூ. 200 கோடி வரை இருக்கும் என தெரியவந்துள்ளது.
விசாரணையில் இதுவரை 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளின் நிர்வாகிகளிடம் தனித்தனியாக வாக்குமூலம் பெற்றதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கைதான பி. டி. அரசகுமாரை ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.