கைதான மொனிரு தின் லஸ்கர் மற்றும் பகவதி மாஜி ஆகியோரிடம் கொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கொலைக்கான காரணம் தெரியவந்தது.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து கடந்த 5-ந்தேதி டெல்லி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சிவப்பு நிற சூட்கேசில் துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆக்ராவில் போலீசார் அதனை கண்டுபிடித்த நிலையில் கொலை செய்யப்பட்ட பெண் யார்? என்பது பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
இதை தொடர்ந்து ஆக்ரா போலீசார் சென்னைக்கு வந்து அதிரடி விசாரணையில் இறங்கினார்கள்.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலைய போலீசாருடன் இணைந்து விசாரித்த ஆக்ரா போலீசார் வீடியோ காட்சிகளை வைத்து நடத்திய விசாரணையில் கொலையுண்ட பெண் அடையாளம் தெரிந்தது.
அவரது பெயர் ஹயாத் நிஷா என்பதும், கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த அவரை கூடுவாஞ்சேரியில் வைத்து வடமாநில வாலிபரும், அவரது மனைவியும் கொடூரமாக கொலை செய்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.
தாம்பரம் போலீஸ் கமிஷனர் பிரேமானந்த் சின்கா உத்தரவின் பேரில் கூடுவாஞ்சேரி தனிப்படை போலீசார் அசாம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு சென்று விசாரித்தார்கள்.
கூடுவாஞ்சேரியில் உள்ள வீட்டில் பெண்ணின் உடல் பாகங்களை பெரிய பிரியாணி அண்டாவில் போட்டு வாலிபரும், அவருடன் இருந்த பெண்ணும் சமைத்ததற்கான அடையாளங்கள் காணப்பட்டதால் இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதையடுத்து பெண்ணை கொலை செய்த மொனிரு தின் லஸ்கர் மற்றும் பகவதி மாஜி ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் தேடினார்கள். ஆனால் இருவரும் சென்னையில் இருந்து தப்பியோடி தலைமறைவானது தெரியவந்தது.
இருப்பினும் அவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. அசாம் மற்றும் ஒடிசாவுக்கு சென்ற 2 தனிப்படை போலீசார் அங்கு பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். இதில் கொலையாளியான மொனிருதின் லஸ்கர் மணிப்பூர் மாநிலத்திற்கு தப்பிச்சென்று அங்கு பதுங்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மொனிருதின் லஸ்கரை கூடுவாஞ்சேரி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அசாம் மாநிலத்தில் கிருஷ்ணாபூரில் வசித்து வந்ததை கண்டுபிடித்த போலீசார் அங்கு சென்று அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் முதலில் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் தான் மணிப்பூருக்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு வைத்து மொனிருதின் லஸ்கரை பிடித்துள்ளனர்.
மொனிருதின் லஸ்கர் கைதான நிலையில் அவரது மனைவி பகவதி மாஜியை கைது செய்ய போலீசார் திட்டமிட்டனர். இதனால் ஒடிசாவில் உள்ள அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரணை நடத்தி பதுங்கி இருந்த பகவதி மாஜியை போலீசார் கைது செய்தனர்.
இதை தொடர்ந்து கைதான மொனிரு தின் லஸ்கர் மற்றும் பகவதி மாஜி ஆகியோரிடம் கொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கொலைக்கான காரணம் தெரியவந்தது.
ஒரே இடத்தில் வேலை செய்த மொனிரு தின் லஸ்கர்- நிஷா இடையே பழக்கம் ஏற்பட்டு நிஷா கர்ப்பம் ஆகி உள்ளார். மொனிரு தின் லஸ்கரிடம் திருமணம் செய்யுமாறு நிஷா கூறிய போது தனக்கு முன்பே திருமணம் நடந்ததாகவும் கர்ப்பத்தை கலைக்குமாறு கூறியுள்ளார்.
இதனால் தனது மனைவியுடன் மொனிரு தின் லஸ்கர் நிஷா வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மொனிரு தின் லஸ்கர் தனது இளம் மனைவியுடன் சென்று நிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் வாக்குவாதமாக மாறி அடித்து கொன்றனர். நிஷாவின் தலையை வெட்டிய தம்பதி ரத்தம் வெளியில் செல்லாதவாறு பிரியாணி அண்டாவில் பிடித்துள்ளனர்.
இதனையடுத்து உடலில் உள்ள சதையை வெட்டி பிரியாணி அண்டாவில் வைத்து எலும்பை மட்டும் சூட்கேசில் அடைத்து ஆக்ரா ரெயிலில் நிலையத்தில் சூட்கேசை விட்டுவிட்டு இருவரும் மணிப்பூர் தப்பிய நிலையில் போலீசார் கைது செய்துள்ளனர்.