சூட்கேசில் உடல் பாகங்கள்... பிரியாணி அண்டாவில் மைதா மாவு தடவிய சதை! சென்னை அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்!

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து உடல் பாகங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தாலும் கொலை செய்யப்பட்ட இடம் கூடுவாஞ்சேரி என்பதால் இந்த வழக்கு விசாரணையை கூடுவாஞ்சேரி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சென்னை புறநகர் ரெயிலில் ஒடிசா வாலிபர் பெண்ணின் உடல் அடைக்கப்பட்ட சூட்கேசை கையில் எடுத்து சென்ற காட்சி.
சென்னை புறநகர் ரெயிலில் ஒடிசா வாலிபர் பெண்ணின் உடல் அடைக்கப்பட்ட சூட்கேசை கையில் எடுத்து சென்ற காட்சி.
Published on

சென்னையை அடுத்த கூடுவாஞ்ரிசேயில் வெளிமாநில பெண் துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்த பெண் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. அவருடன் ஒரே வீட்டில் வசித்து வந்த இளம் தம்பதி இந்த கொடூரக் கொலையை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

ஆக்ராவில்

வண்டலூரில் இருந்து பெண்ணின் உடல் பாகங்களை சூட்கேசில் அடைத்து எடுத்துச் சென்று சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஆக்ராவுக்கு அவர்கள் அனுப்பி வைத்திருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த கொலை சம்பவம் தொடர்பாக பல்வேறு புதிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:-

சென்ட்ரல் ரெயில் நிலையம்

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து ஆக்ராவுக்கு சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த 5-ந்தேதி சிகப்பு நிற சூட்கேசை அம்மாநில போலீசார் மீட்டனர்.

சந்தேகத்தின் பேரில் அதனை திறந்து பார்த்த போது அதில் தலை இல்லாத பெண்ணின் உடல் பாகங்கள் இருந்தது. துண்டு துண்டாக வெட்டப்பட்டு இருந்த உடல் பாகங்களை மீட்டு விசாரணை நடத்திய போலீசார் சென்னைக்கு வந்தும் சென்ட்ரல் ரெயில்வே போலீசார் துணையுடன் அதிரடி விசாரணையில் இறங்கினார்கள்.

இதில் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பது தெரிய வந்தது. அவரது பெயர் ஹயாத் நிஷா என்பதும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.

கூடுவாஞ்சேரி

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் சூட்கேசை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் வைத்து விட்டு சென்றது யார்? என்பதை முதலில் கண்டறிந்தனர். ரெயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா ஒன்றில் இளம்பெண் கொலை செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருந்த சூட்கேசை ஒரு ஆணும், பெண்ணும் எடுத்து வந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் வைத்துவிட்டு செல்வது அங்கிருந்த கேமராவில் பதிவாகியிருந்தது.

பூங்கா ரெயில் நிலையம்

அந்த கேமரா காட்சிகளை பதிவு செய்து கொண்ட போலீசார் அதனை வீடியோவாகவும், புகைப்படமாகவும் எடுத்து வைத்து கொண்டு வழக்கு விசாரணையை வேகப்படுத்தினார்கள்.

சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வெளியில் வந்து சம்பந்தப்பட்ட பெண்ணும், ஆணும் எந்தப்பக்கமாக சென்றுள்ளார்கள் என்பதை அறிவதற்காக ரெயில் நிலையம் முன்பு உள்ள சாலையில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களை போட்டுப்பார்த்தனர். இதில் இருவரும் பூங்கா ரெயில் நிலையத்திற்கு சென்று அங்கிருந்து மின்சார ரெயிலில் கூடுவாஞ்சேரிக்கு சென்றதையும் போலீசார் கண்டுபிடித்தனர். அவர்கள் இளம்தம்பதி என்பதும் தெரிய வந்தது.

ஒரே வீட்டில்

கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் இறங்கிய இந்த தம்பதி அங்கிருந்து கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்றதையும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலமாக கண்டுபிடித்த போலீசார் தாங்கள் வைத்திருந்த போட்டோ மற்றும் வீடியோக்களை அக்கம் பக்கத்தில் காட்டி விசாரித்தனர்.

இதில் போலீசார் அடையாளம் கண்ட தம்பதி ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்களுடன் பெண் ஒருவரும் தங்கி இருந்துள்ளார். அவர் தான் கொலை செய்யப்ப்டட ஹயாத் நிஷா என்பதையும் போலீசார் உறுதி செய்தனர்.

கொடூர கொலை

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஹயாத் நிஷா திருமணம் ஆகி கணவரை பிரிந்து வாழ்ந்துள்ளார். இவரது 19 வயது மகன் ஏ.சி. மெக்கானிக்காக தாம்பரத்தில் பணியாற்றி வருகிறார். ஹயாத் நிஷா மட்டும் இளம் தம்பதியோடு ஒரே வீட்டில் வசித்து வந்தபோது தான் துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளார்.

இதை தொடர்ந்து போலீசார் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு பிரியாணி தயாரிக்கும் பெரிய அண்டாவில், ஹயாத் நிஷாவின் துண்டிக்கப்பட்ட உடலின் சதை பாகங்கள் போட்டு வைக்கப்பட்டு இருந்தது.

கொலையுண்ட பெண்ணின் உடல் பாகங்கள் வைக்கப்பட்டிருந்த பிரியாணி பாத்திரத்தை போலீசார் மீட்டு ஆய்வுக்காக எடுத்துச் சென்றபோது எடுத்த படம்.
கொலையுண்ட பெண்ணின் உடல் பாகங்கள் வைக்கப்பட்டிருந்த பிரியாணி பாத்திரத்தை போலீசார் மீட்டு ஆய்வுக்காக எடுத்துச் சென்றபோது எடுத்த படம்.

மைதா மாவு

அந்த சதைகள் மீது மைதா மாவையும் தடவி வைத்திருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். வீடு முழுவதும் ரத்த கறை படிந்து இருந்த நிலையில் அண்டாவில் போட்டு வைக்கப்பட்டிருந்த சதை பாகங்களுடன், காய்கறிகளும் காணப்பட்டது. சதை மற்றும் காய்கறிகள் வேக வைத்தது போன்று இருந்தது. இதுவும் போலீசாரை மிகுந்த அதிர்ச்சி அடைய செய்தது.

இதனால் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை அண்டாவில் போட்டு தம்பதி சமைத்து இருக்கலாம் என்கிற சந்தேகமும் ஏற்பட்டு உள்ளது.

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து உடல் பாகங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தாலும் கொலை செய்யப்பட்ட இடம் கூடுவாஞ்சேரி என்பதால் இந்த வழக்கு விசாரணையை கூடுவாஞ்சேரி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

தேடுதல் வேட்டை

கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பதை உறுதி செய்துள்ள போலீசார் கொலையாளிகளான தம்பதியை பிடிப்பதற்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 5-ந்தேதி சூட்கேசில் உடல் மீட்கப்பட்ட நிலையில் கொலை நடந்து தற்போது 2 வாரங்களுக்கு மேல் ஆகி விட்டதால் கொலையாளிகள் தப்பிச் சென்று எங்காவது பதுங்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

செல்போன் எண்கள்

இதை தொடர்ந்து இளம் தம்பதி பயன்படுத்திய செல்போன் எண்கள் மூலமாக அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர். கொலையாளிகள் சிக்கினால் மட்டுமே அவர்கள் தலையை எங்கு வீசினார்கள் என்பது தெரிய வரும் என்பதால் அவர்களை தேடி கண்டு பிடிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

அழுகி இருக்கும்

இது தொடர்பாக போலீசார் கூறும்போது, பெண் கொலை செய்யப்பட்டு 15 நாட்களுக்கு மேல் ஆகி விட்டதால் கொலையாளிகள் தலையை வெளியில் எங்காவது வீசி இருந்தால் இந்நேரம் அது அழுகிப் போயிருக்கவும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும் தலையை தேடி கண்டுபிடிக்கும் பணியையும் தீவிரப்படுத்தி உள்ளோம்.

மின்சார ரெயில்

கூடுவாஞ்சேரியில் இருந்து பெண்ணின் உடலை சூட்கேசில் அடைத்து மின்சார ரெயிலில் தான் எடுத்துச் சென்று உள்ளனர். பூங்கா நகர் ரெயில் நிலையத்தில் இறங்கி பின்னர் சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு நடந்து சென்று தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சூட்கேசை வைத்து விட்டு சத்தமில்லாமல் ரெயில் நிலையத்தை விட்டு இருவரும் வெளியேறி இருப்பதும் தெரிய வந்து உள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக உதவி கமிஷனர் சேகர்பாபு தலைமையிலான போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.

கூடுவாஞ்சேரி மசூதி தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பெண் ஒருவர் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com