‘தேர்தல் மன்னன்' பத்மராஜன் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. தினமும் காலை 11 மணிக்கு தொடங்கி 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.
இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் வருகிற 16-ந்தேதி வரை நடைபெறுகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 17-ந்தேதி நடைபெறும். வேட்புமனுக்களை திரும்ப பெற 19-ந்தேதி கடைசி நாள் ஆகும். அக்டோபர் 6-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும். அக்டோபர் 9-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், ‘தேர்தல் மன்னன்' என்று அழைக்கப்படும் மேட்டூரைச் சேர்ந்த கே. பத்மராஜன் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் இன்று தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
1988-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு வரும் பத்மராஜன், சமீபத்தில் மேல்சபை தேர்தலுக்கு (255-வது முறை) மனுத்தாக்கல் செய்திருந்தார். தற்போது தாராபுரம் இடைத்தேர்தலில் அவர் 256-வது முறையாக வேட்பு மனுவை அளித்துள்ளார்.