தமிழக காங்கிரஸ் அமைச்சர்கள், விசிக மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
சென்னையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, தமிழக உயர்கல்வி அமைச்சர் பி. விஸ்வநாதன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
தமிழக வெற்றி கழக கூட்டணி கட்சியில் இருக்கிற சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து தமிழக முதலமைச்சர் விஜய் இன்று பேசினார்.
இந்த சந்திப்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார், உயர் கல்வித்துறை அமைச்சராகிய நான் மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் உள்ளிட்டோர் கலந்துகொண்டோம்.
டெல்டா மாவட்டங்களான கடலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் ஆகிய பகுதிகளில் மழை குறைவாக இருக்கின்ற காரணத்தால் பயிர்கள் கருகும் சூழ்நிலையில் உள்ளன.
இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டுமென்று முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம்.
அந்த கோரிக்கையின் அடிப்படையில், அமைச்சர்கள் உள்ளடக்கிய ஒரு பிரதிநிதிகள் சபையை உருவாக்கி, அவர்களை டெல்டா மாவட்டங்களுக்கு அனுப்பி, அந்த பகுதிகளை பார்வையிட்டு, விவசாயிகளுக்கு ஏற்பட்டிருக்கிற இழப்பீடுகளை கணக்கெடுத்து, அது சம்பந்தமான துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற முறையில், மாவட்ட ஆட்சியருடன் இதுகுறித்து விவாதித்து, நான் அமைச்சர்களுடன் இணைந்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.