நாடு முழுவதும் நடப்பாண்டின் பட்டாசு வர்த்தகம் சுமார் ரூ.7 ஆயிரம் கோடிக்கு நடந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர், ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நாக்பூர், சென்னை உரிமம் பெற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய அளவிலான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கு லட்சக்கணக்கானோர் தினக்கூலி அடிப்படையில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்த ஆலைகளில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் தீபாவளியை முன்னிட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. இவை தவிர வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்தியாவின் பட்டாசு தேவையில் 90 சதவிகிதத்தை பூர்த்தி செய்யும் சிவகாசியில் நடப்பாண்டு 2026-ன் ஆரம்பத்தில் பட்டாசு உற்பத்தி தொடங்கப்பட்ட காலகட்டத்தில் மழையின் சீதோசஷ சூழலினால் பட்டாசு உற்பத்தி மந்தமான நிலையிலேயே நடைபெற்றது. இதன் காரணமாக கடந்த ஆண்டை விட 30 சதவீதம் பட்டாசு உற்பத்தில் குறைந்தது.
அதனைத் தொடர்ந்து பட்டாசு தயாரிப்பு வேகமெடுத்த நிலையில், நடைபெற்ற தொடர் விபத்துக்களைச் சுட்டிக்காட்டி நடத்தப்பட்ட தொடர்ச்சியான ஆய்வினால், தொழிற்சாலைகளின் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டதின் காரணமாக, பட்டாசு உற்பத்தியில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. நடப்பாண்டில் மட்டும் சுமாராக ரூ.8 ஆயிரம் கோடிக்கு பட்டாசு உற்பத்தியாகும் என்ற எதிர்பார்ப்போடு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், போர்ப் பதற்றத்தினால் மூலப்பொருட்களின் விலை உயர்வு போன்ற இன்னல்களால் பட்டாசு உற்பத்தியில் பின்னடைவு ஏற்பட்டது.
இதனால் ரூ.7 ஆயிரம் கோடிக்கு மட்டுமே சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி பட்டாசுகள் உற்பத்தியாகி நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பட்டாசு வியாபாரம் அனைத்து மாநிலங்களிலும் அமோகமாக நடைபெற்றது. நாடு முழுவதும் பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியுடன் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடினர்.
அதன்படி நாடு முழுவதும் நடப்பாண்டின் பட்டாசு வர்த்தகம் சுமார் ரூ.7 ஆயிரம் கோடிக்கு நடந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 8 வருடங்களுக்கும் மேலாக சரவெடிப் பட்டாசு உற்பத்திக்கும், விற்பனைக்கும் தடையாணை விதித்திருந்த சுப்ரீம் கோர்ட்டு, தற்போது நிபந்தனையுடன் கூடிய சரவெடி தயாரிப்புக்கு அனுமதியளித்துள்ளது.
இதனால் 2027-ம் ஆண்டின் பட்டாசு உற்பத்தி அதிகரிக்குமென்ற உறுதியுடன் தீபாவளிப் பண்டிகை முடிந்த கையோடு தங்களது தொழிற்சாலைகளில் பட்டாசுகளின் தயாரிப்பைத் தொடங்க உற்பத்தியாளர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். எதிர்வரும் வருடத்தின் (2027) பட்டாசு உற்பத்தி ரூ.10 ஆயிரம் கோடி இலக்கை எளிதில் எட்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.