சென்னை-தூத்துக்குடிக்கு நாளைய விமான கட்டணம் ரூ.17 ஆயிரத்து 363 ஆக அதிகரித்து உள்ளது.
தீபாவளி பண்டிகை வருகிற 8-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு உள்ளனர். அவர்கள் நாளை முதல் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். இதற்காக சிறப்பு ரெயில்கள், சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. ரெயில்கள், பஸ்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டன. இதனால் தற்போது பெரும்பாலானோர் விமானங்களில் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு வருகிறார்கள்.
இதன் காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு விமான கட்டணம் பல மடங்கு அதிகரித்து உள்ளது. எனினும் விலை உயர்வை பற்றி கவலைப்படாமல் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகிறார்கள். இதனால் விமானங்களிலும் நாளைய பயணத்திற்கு ஒரு சில டிக்கெட்டுகளே உள்ளன.
சென்னை-தூத்துக்குடிக்கு நாளைய விமான கட்டணம் ரூ.17 ஆயிரத்து 363 ஆக அதிகரித்து உள்ளது. இதேபோல் மதுரைக்கு-ரூ.10 ஆயிரத்து 700, கோவை-ரூ.10 ஆயிரம் முதல் ரூ.19 ஆயிரம் வரையும், திருச்சி-ரூ.12 ஆயிரம், சேலம்-ரூ.12 ஆயிரத்து 769 ஆக எகிறி உள்ளது. இந்த விமான கட்டணம் உயர்வு நாளை மறுநாளும் (7-ந்தேதி) இதே அளவில் இருக்கின்றன. ஆனால் சென்னையில் இருந்து ஐதராபாத், மும்பை, கொச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு விமான கட்டணங்கள் பெரிய அளவில் அதிகரிக்கவில்லை.