தீபாவளி பண்டிகைக்காக வீட்டில் வாங்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து இளைஞர் பலி

நள்ளிரவில் எதிர்பாராத விதமாக மாடியில் வைத்திருந்த பட்டாசுகள் திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின
பட்டாசுகள் வெடித்து வீடு சேதம்
Published on: 

நாடு முழுவதும் வருகிற 8-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து பகுதிகளிலும் பட்டாசு விற்பனை களை கட்டியுள்ளது. இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் பெரும்பாலானோர் பட்டாசுகளை வாங்கி வருகிறார்கள்.

இந்தநிலையில் மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள கருங்காலக்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் ஜெயபாரதி. இவருடைய மகன் யோகேஷ் (வயது 20). இவருடைய நண்பர் மனோஜ் (21).இருவரும் ஒத்தக்கடை அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவர்கள் பல ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளை வாங்கி வந்து பாதுகாப்பு கருதி வீட்டின் மாடியில் உள்ள தனி அறையில் வைத்திருந்தனர். நேற்று இரவு வழக்கமான பணிகளை முடித்துக்கொண்டு அனைவரும் கீழ் அறையில் தூங்கிக்கொண்டு இருந்தனர்.

நள்ளிரவில் எதிர்பாராத விதமாக மாடியில் வைத்திருந்த பட்டாசுகள் திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் வீடு பலத்த சேதம் அடைந்தது. மாடி அறையும் இடிந்து கீழே விழுந்தது. இந்த வெடி விபத்தில் மனோஜ், யோகேஷ், அவரது தாய் யோகவாணி (45) ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறை வீரர்கள் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து நடந்த இடத்தை மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார், தாசில்தார் வசந்த் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த வெடி விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர்.

இதனிடையே மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மனோஜ் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். பலியான மனோஜ் மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக். இரண்டாமாண்டு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

படுகாயங்களுடன் யோகேஷ், அவரது தாயார் யோகவாணி ஆகியோருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாடி அறையில் வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகள் திடீரென வெடித்து சிதற காரணம் என்ன? அதேபோல் அந்த பட்டாசுகளில் வீரியம் அதிகம் மிகுந்த வெடி மருந்துகள் அடைக்கப்பட்டு இருந்ததா? எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

X