தமிழக செய்திகள்

திருப்பரங்குன்ற தீபத்தூண் : உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் - சிபிஎம் வலியுறுத்தல்

இடைக்கால தடைக்குப் பதில் இடைக்கால அனுமதியா?

திருப்பரங்குன்ற தீபத்தூணில் கார்த்திக்கை நவ.24 அன்று தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் இடைக்கால அனுமதி வழங்கியிருக்கும் தீர்ப்பை எதிர்த்து அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என சிபிஎம் மாநில தலைவர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி

நவம்பர் 24, 2026 அன்று நடைபெறும் கார்த்திகை தீபத் திருநாளில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணியில் தீபம் ஏற்ற இந்திய உச்ச நீதிமன்றம் நவம்பர் 20, 2026 அன்று ஒருமுறை மட்டுமே செல்லத்தக்க இடைக்கால அனுமதி வழங்கப்பட்டுள்ளது .நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

திருப்பரங்குன்றம் இடைக்கால தடைக்குப் பதில் இடைக்கால அனுமதியா? நியாயமற்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து பெ,சண்முகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது

திருப்பரங்குன்றத்தில் வழக்கத்திற்கு மாறாக தர்கா அருகில் உள்ள நில அளவை தூணில் இந்த ஆண்டு தீபம் ஏற்றிக் கொள்ளலாம் என்பது எந்த வகையிலும் சட்டத்தின் அடிப்படையிலான தீர்ப்பு அல்ல. இது இடைக்கால தீர்ப்பு தான் என்று உச்சநீதிமன்றமே கூறிவிட்டு, இதுவரையிலும் தீபம் ஏற்றப்படாத ஒரு இடத்தில் இந்த ஆண்டு மட்டும் தீபம் ஏற்றலாம் என்று சொல்வது நியாயமற்றதாகும்.

தமிழ்நாடு அரசு மற்றும் கோவில் நிர்வாகம் நில அளவைக் கல் தூணில் தீபம் ஏற்றுவது சரியல்ல என்பதை ஆதாரங்களுடன் முன்வைத்த நிலையில், இடைக்காலமாக இந்த தீபம் ஏற்றலாம் என்கிற தீர்ப்பு நியாயமற்றதாகும். பொதுவாக, இடைக்கால தீர்ப்புகள், தீர்ப்பு வழங்கப்படும் வரை தற்கால நிலையே தொடரட்டும் என்று சொல்வதே வழக்கமாக இருந்திருக்கிறது.

மாநில அரசை அச்சுறுத்தும் நடவடிக்கை

அதேபோன்று, சட்டம் ஒழுங்கு மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்கிற சூழலில்எவ்வித அவசியமும் அற்ற நிலையில் மத்திய அரசின் தொழிலக காவல் படையை பயன்படுத்தலாம் என்பது அப்பட்டமாக மாநில அரசின் உரிமையில் தலையிட்டு, மாநில அரசை அச்சுறுத்தும் நடவடிக்கையாகும்.

அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

எனவே, மாநில அரசு இந்த தீர்ப்பிற்கு எதிராக உடனடியாக மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், பதட்டத்தை ஏற்படுத்த முனையும் மதவெறி சக்திகளை உறுதியுடன் எதிர்கொண்டு சமூக அமைதியையும், மத நல்லிணக்கத்தையும், மக்கள் ஒற்றுமையையும் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை உறுதியோடு மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

SCROLL FOR NEXT