மலேசியாவில் சர்வதேச தமிழ் வரலாற்று ஆய்வு மாநாடு தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பங்கேற்க மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதற்கு சிபிஎம் மாநில தலைவர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கீழடி அகழாய்வு அறிக்கையில் கால கணக்கீடு (கிமு 8-ம் நூற்றாண்டு முதல் கிபி 3-ம் நூற்றாண்டு வரை) தொடர்பாகத் தொல்லியல் துறை கூறிய மாற்றங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணன் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் இந்திய அரசு அல்லது தொல்லியல் துறையின் கொள்கைகளை விமர்சிக்கக் கூடாது என்றும் எழுத்துப்பூர்வ உறுதிமொழி கோரப்பட்டது. இந்த நிபந்தனைகளுக்கு அவர் உடன்பட மறுத்ததால் அனுமதி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது
தொல்லியல் துறையின் சிறந்த ஆய்வாளராகத் திகழும் அமர்நாத் இராமகிருஷ்ணன் இத்தகைய தடைகளுக்கு ஆளாவது அவரின் அறிவியல் பூர்வமான கருத்துகளுக்கு எதிரான பழிவாங்கலே ஆகும் என்று சிபிஎம் மாநில தலைவர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவ்து
கீழடியின் தொன்மை நிறுவப்படுவது சங்பரிவாரத்தின் போலி வரலாற்று திரிபுகளுக்கு எதிரானதாக இருக்குமென்பதே உண்மை. அதனால் தான் அறிக்கையை மாற்றி எழுதுமாறு அமர்நாத் மீது நிர்ப்பந்தம் உருவாக்கப்படுகிறது.
சுதந்திரமாக செயல்பட வேண்டிய இந்தியத் தொல்பொருள் ஆய்வு மையம், ஒன்றிய அரசின் அரசியல், சித்தாந்த தேவைகளுக்கானதாக மாற்றப்படுவதன் வெளிப்பாடே அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு விதிக்கப்படும் நிபந்தனைகளும் தடைகளும் ஆகும்.
ஆகவே, அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் மலேசியாவில் நடைபெறும் தமிழ் வரலாற்று ஆராய்ச்சி மாநாட்டில் பங்கேற்க விதிக்கப்படும் தடை முற்றிலும் ஏற்க இயலாதது. ஒன்றிய அரசு இத்தடையை விலக்கி, அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு உரிய அனுமதி வழங்க வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.
என்று குறிப்பிட்டுள்ளார்.