தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரையில் தொடர்ந்து சாரல் மழை பெய்ததால் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் மெயின் அருவியில் அனைத்து பகுதிகளிலும் பரவலாகவும் புலியருவியில் மூன்று கிளைகளிலும் பழைய குற்றால அருவிக்கும் சிற்றருவிக்கும் கணிசமாக தண்ணீர் அதிகரித்தது.
நேற்று மாலை முதல் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் இன்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் கார்கள், வேன், பஸ் போன்ற வாகனங்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்திருந்தனர்.
ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின் அருவியில் நீண்ட வரிசையில் நின்று சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிப்பால் அனைத்து அருவி பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு அதிக அளவில் போடப்பட்டிருந்தது. இன்று காலையிலும் குற்றாலம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் சீசன் களைகட்டி உள்ளது.