காரை ஆய்வு செய்தபோது அதில் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட 250 கிலோவிற்கும் அதிகமான குட்கா புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
கோவையில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்களைக் கடத்திச் சென்ற காரை பிடிக்க, 40 கிலோமீட்டர் தூரம் அதிவேகமாகச் சென்ற காரின் கூரை கம்பிகளை பிடித்துக் கொண்டே பயணித்து கடத்தல்காரர்களைப் பிடித்த கோவில்பாளையம் காவல்நிலைய முதல்நிலை தலைமைக்காவலர் வேல்முருகனின் துணிச்சலான செயலுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவரது வீரத்தை மெச்சி தமிழக முதல்வர் விஜய் தொலைபேசி வாயிலாக நேரில் அழைத்துத் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
கோவை கோவில்பாளையம் பகுதியில் காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, கர்நாடகப் பதிவெண் கொண்ட வெள்ளை நிற சொகுசு கார் ஒன்று சந்தேகத்திற்கிடமாக வந்துள்ளது. அதைத் தடுத்து நிறுத்தி விசாரிக்க முயன்றபோது, காரிலிருந்த நபர்கள் தப்பியோட முயன்றனர். அப்போது சப்-இன்ஸ்பெக்டரின் கை காரின் ஜன்னலில் சிக்கிக் கொண்ட நிலையில், குற்றவாளிகள் தப்பிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த தலைமைக்காவலர் வேல்முருகன், நொடிப் பொழுதில் சாதுரியமாகச் செயல்பட்டு காரின் கூரை கம்பியைப் பிடித்து மேலே ஏறினார்.
காரை நிறுத்தாமல் கடத்தல்காரர்கள் சுமார் 100 கி.மீக்கும் அதிகமான வேகத்தில் திருப்பூர் நோக்கி இயக்கிச் சென்றுள்ளனர். இருப்பினும், எதைப் பற்றியும் யோசிக்காமல் காரின் மேல் கூரையைப் பலமாகப் பற்றியபடி 40 கிலோமீட்டர் தூரம் வேல்முருகன் பயணித்துள்ளார். இதனைப் பின்தொடர்ந்து வந்த காவல் வாகனங்களும், ஆம்புலன்ஸும் விரைந்து செயல்பட்டு திருப்பூர் அவிநாசி அருகே காரை மடக்கிப் பிடித்தன. காரை ஆய்வு செய்தபோது அதில் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட 250 கிலோவிற்கும் அதிகமான குட்கா புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. காரிலிருந்த ராஜஸ்தானைச் சேர்ந்த 3 கடத்தல்காரர்களைக் காவல் துறையினர் உடனடியாகக் கைது செய்தனர்.
உயிரைப் பணயம் வைத்து குற்றவாளிகளைப் பிடித்து கடத்தலை முறியடித்த வேல்முருகனின் இந்த சினிமா பாணி வீரச் செயல் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலானது. இதனையடுத்து, காவலர் வேல்முருகனை நேரடியாகத் தொலைபேசியில் தொடர்புகொண்ட தமிழக முதலமைச்சர் விஜய், ஆபத்தான சூழலிலும் துணிச்சலாக செயல்பட்ட அவரது கடமை உணர்வை பெரிதும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு காவல் துறை உயர் அதிகாரிகளும், பொதுமக்களும் அவரது இந்த அசாத்திய தைரியத்தை பாராட்டி வருகின்றனர்.